சயிட்டம் விவகாரம்: இணக்கப்பாட்டுக்கு வர வாய்ப்பு!

செப்டம்பர் 14, 2017

சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி, இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என, சட்டமா அதிபர் தரப்பில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த மேன்முறையீட்டு மனுவை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என, தெரியப்படுத்தியுள்ளார். 

மேலும், இது குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் வரை, மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறும் அவர் கோரியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து தனக்கு அறிவுரை வழங்கப்படவில்லை என, இலங்கை வைத்திய சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனையடுத்து, வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்ட நீதியரசர்கள், இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர வாய்ப்புகள் இருப்பின் வருங்காலத்தில் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், மனுதாரர்களுக்கு அறிவித்தார்.  மேலும், வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

செய்திகள்