ஒளிரும் நட்சத்திரம்: விஜய் சேதுபதி

August 13, 2017

1. கடந்த சில ஆண்டுகளாக அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைச் சூட்டியவர் இயக்குநர் சீனு.ராமசாமி. காளிமுத்து- சரஸ்வதி தம்பதியின் மகனாக 16.01.1978-ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி.

2. விஜய் சேதுபதியின் தந்தை சிவில் இன்ஜினீயர். பணி நிமித்தம் சென்னைக்குக் குடும்பம் குடிபெயர்ந்ததால், தனது உயர்நிலைக் கல்வியைச் சென்னையில் பயின்றார். பள்ளிக்காலத்தில் விளையாட்டிலோ பிற தனித்திறமைகளிலோ ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி, அதிகம் கேள்வி கேட்பவராக வளர்ந்தார். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் வணிகவியல் பயின்று பி.காம். பட்டம் பெற்றார்.

3. குடும்பத்துக்கு உதவும் விதமாக துபாய் சென்று ‘கணக்காளராக’ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த வேலை பிடிக்காமல் போனதால் சென்னை திரும்பினார். விஜய் சேதுபதியின் இந்த முடிவை அவருடைய அப்பா பாராட்டியதோடு “ உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய். உன் மனம் சொல்வதைக் கேள்” என்றார்.

4. காதல் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளின் தந்தையாக மாறிய விஜய் சேதுபதியிடம் அவருடைய நண்பரான ஒளிப்படக் கலைஞர் ஒருவர்,“ உனது கண்களும் முகமும் ஒரு நடிகனுக்குரியவை” என்று கூறிச் சென்றார். நண்பர் கூறியது முகஸ்துதி அல்ல என்பதைப் புரிந்துகொண்ட விஜய் சேதுபதி, சினிமாவில் நடிப்பது என்று முடிவெடுத்தார். இதைக் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது ‘ஆர்வக்கோளாறு’என்று விமர்சிக்கப்பட்டார்.

பட கம்பெனிகளைத் தேடிச் சென்று நடிக்க வாய்ப்பு தேடியபோது, அவரது ஒளிப்படங்களை வாங்கிக்கொள்ளவே பலர் மறுத்தனர். இதனால் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பைப் பயில விரும்பினார். ஆனால், அங்கே நடிப்புப் பிரிவில் சேர இடம் இல்லை. அதனால் ‘கணக்காளராக’ கூத்துப்பட்டறையில் பணியில் சேர்ந்தார். 2005-ல் சுனாமி விழிப்புணர்வு வீதி நாடகங்களைத் தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்களில் கூத்துப்பட்டறை அமைப்பு நடத்தியது.

அதன் நடிகர்கள் குழுவில் இணைந்துகொண்ட விஜய் சேதுபதி, முதல்முறையாக வெகு மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்தவெளியில் நடித்தார். 

5. அதன் பின்னர் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் துணை நடிகராகப் பல படங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒன்று ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. பின்னர் ‘புதுப்பேட்டை’, ‘லீ’ ஆகிய படங்களில் சில காட்சிகளில் நடித்தார். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்தவரை ‘பெண்’ தொலைக்காட்சித் தொடரின் மூலம் முகம் தெரியவைத்தார் இயக்குநர் சி.ஜே.பாஸ்கர். தொடரில் நடித்துக்கொண்டே கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கிய குறும்படங்களின் வழியாக இணையத்தில் அறியப்படும் இளம் நடிகராக ஆனார்.

6. 2010-ல் வெளியான ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதன் பின்னர் சாகச நாயகன் பிம்பம் இல்லாத கதாபாத்திரங்களுக்கான நடிகராகக் கொண்டாடப்பட்டு வருகிறார். ‘சூது கவ்வும்’ தாஸ், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பிரேம் குமார், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சுமார் மூஞ்சி குமாரு, ‘பண்ணையாரும் பத்மினியும்’ முருகேசன், ‘ஆரஞ்சு மிட்டாய்’ கைலாசம், ‘இறைவி’ மைக்கேல், தற்போது ‘விக்ரம் வேதா’வில் வேதா என சாமானிய மக்களின் மத்தியிலிருந்து எழுந்துவரும் எளிய, விளிம்புநிலைக் கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டிவருகிறார்.

7. தனது இயல்பான நடிப்புக்காக விஜய் சேதுபதி எந்த நடிப்பு உத்தியையும் பின்பற்றுவதில்லை. 39 வயது நிரம்பிய விஜய் சேதுபதி ‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயதுக்காரராகவும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் 55 வயது முதியவர் தோற்றத்திலும், ‘றெக்க’ படத்தில் 25 வயது இளைஞராகவும் தனது கதாபாத்திரங்களுக்காக வெளிப்படுத்தும் நம்பகமான நடிப்பின் மூலம் எதிர்காலம், கடந்த காலத்துக்குப் பயணித்துக்காட்டி பார்வையாளர்களை வசீகரித்துவருகிறார்.

8. ‘ஆரஞ்சு மிட்டாய்’, இப்போது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனத் தமிழ் வாழ்க்கையைப் பேசும் படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி, திரையுலகில் கவனிக்கத்தக்க பங்களிப்பைத் தந்திருக்கும் 100 சமகாலக் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழா எடுத்து அவர்களுக்கு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மூலம் தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கிக் கவுரவப்படுத்தினார்.

9. தன் திரையுலக வாழ்க்கையில் திட்டமிடலோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் பயணம் செய்துவரும் இவர் குடும்பத்தையும் நண்பர்களையும்பெரிதும் நேசிப்பவர். பள்ளியில் அவருடன் படித்த உயிர்த் தோழன் சூர்யா பதினோராம் வகுப்பு படிக்கும்போது இறந்துபோனார். அவரது நினைவாக தன் மகனுக்கு சூர்யா என்று பெயர் சூட்டியிருக்கிறார். பள்ளி விடுமுறை நாட்களில் தன் மனைவி, பிள்ளைகளை வெளியூர் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவழைத்துவிடுவார்.

10. ‘விக்ரம் வேதா’ படத்தில் ‘ஒரு கதை சொல்லட்டா சார்?’ என்று கதை சொல்லித் தப்பிக்கும் ‘வேதாளம்’ விஜய் சேதுபதி, நிஜ வாழ்க்கையில் தனது சொந்தப் பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவர். தனது ரசிகர்களிடம் “ நான் உட்பட எந்த நடிகரையும் பின்பற்றாதீர்கள்” என்று கூறிவருவதோடு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தயக்கம் ஏதுமின்றி கருத்துக்கூறுபவராகத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

செய்திகள்