ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 5

புதன் மார்ச் 21, 2018

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நீங்கள் உருவாக்குவதற்கு உதவி செய்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை...” வந்திருந்தவர் இப்படிக் கூறியதும், கே.பியும், இன்பமும் தமது புருவங்களை உயர்த்தி அவரை உற்றுப் பார்த்தார்கள். பின்னர் ஒருவரையயாருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள். தாம் காண்பது கனவா? அல்லது நனவா? என்ற குழப்பத்தில் இருந்து மீள முடியாமல் அவர்கள் இருப்பது போல் தென்பட்டது. தனது பிடியில் சிக்கியிருந்தவரை நகுலனுடன் உரையாட வைத்து அதன் மூலம் அவரைத் தனது தலைமைத்துவத்தை ஏற்க வைப்பதற்கு எடுத்த முயற்சி தோல்வி கண்டுவிட்டது என்று தான் மனம் வெதும்பியிருந்த பொழுது, திடீரென தனது தலைமைத்துவத்தை ஏற்கும் சமிக்ஞையை அவர் வெளியிட்டது கே.பியைப் பொறுத்த வரை நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.

அப்பொழுது கே.பி ஆங்கிலத்தில் பேசினார்: ‘தாங்க்ஸ். தங்க்யூ வெரி மச்...’

**********************

கோலாலம்பூரில் கே.பியின் செப்படி வித்தை அரங்கேறிக் கொண்டிருப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்திருந்த ஈழமுரசின் தலைமையத்தில் அது நடந்தது.

தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து 24.05.2009 அன்று கே.பி வெளியிட்ட அறிக்கையை ஈழமுரசு வெளியிட மறுத்ததை அடுத்து, அவ்வறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி வெவ்வேறு நபர்கள் ஊடாக ஈழமுரசு நிறுவனத்திற்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வந்தது. இது விடயமாக உரையாடுவதற்காக ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியர் ஜெயசந்தர் அவர்களை மலேசியா வந்து கே.பியை சந்திக்குமாறு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அதனை ஈழமுரசின் ஆசிரியரும், அதன் சகல ஊடகவியலாளர்கள் - நிர்வாகிகளும் நிராகரித்தார்கள்.

 

இதனை அடுத்து அப்பொழுது ஈழமுரசு பத்திரிகையின் தலைவராக விளங்கிய மறைந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் மாமா அவர்களை அணுகிய ஒரு நபர், தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த தவேந்திரனின் தொடர்பில் இருப்பவர் என்றும், கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்று ஈழமுரசு செயற்பட வேண்டும் என்று தவேந்திரன் விரும்புவதாகவும் தெரிவித்தார். அவ்வளவுதான், கடும் சீற்றம் கொண்ட பிரான்சிஸ் மாமா, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைத் தவிர வேறு எவரது தலைமைத்துவத்தைத் தானோ அன்றி ஈழமுரசு பத்திரிகையின் ஏனைய ஊடகவியலாளர்கள் - நிர்வாகிகளோ ஏற்கப் போவதில்லை என்று கூறியதோடு, வந்திருந்த நபரையும் எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தார்.

இவ்விடத்தில் தவேந்திரனைப் பற்றி எமது வாசகர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டலை நாம் மேற்கொள்வது பொருத்தமானது. இத் தொடரின் அறிமுகப் பத்தியில் தவேந்திரன் என்றழைக்கப்படும் சுமதிபால சுரேஸ்குமார் பற்றிய அறிமுகத்தை நாம் மேற்கொண்டிருந்தது வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம். 1985ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராகத் திகழ்ந்த இவர், இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து கோத்தபாய ராஜபக்சவின் வழிநடத்தலில் கிரிதல காட்டுப்புறத்தில் உள்ள பாசறையயான்றில் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இயக்கி வந்தமை பற்றி அப்பத்தியில் நாம் எழுதியிருந்தமை வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து வெளிவந்த எமது முதலாவது தொடரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவின் பொறுப்பாளரான விநாயகம் அல்லது அறிவழகன் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் துணைவியையும், பிள்ளைகளையும் தடுப்பு முகாம் ஒன்றிலிருந்து திருகோணமலை டொக் யார்ட் கடற்படைத் தளத்திற்குச் சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் கொண்டு சென்றமை பற்றியும், அவர்களை சிங்களப் புலனாய்வாளர்களுக்கு அடையாளம் காட்டியதில் சரளமாகத் தமிழும், சிங்களமும் பேசக் கூடிய இராணுவச் சீருடை தரித்த ஒருவர் வகித்த பங்கு பற்றியும் பூடகமான குறிப்புக்களை வெளியிட்டிருந்தோம். அந்த நபர் வேறு யாரும் அல்ல: தவேந்திரன் தான் அவர். ஆம், விநாயகம் அவர்களின் குடும்பத்தினரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து அவரை வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவின் போராளிகள், முகவர்கள், இரட்டை முகவர்களைத் தமது ஆட்களாகச் சிங்களப் புலனாய்வுத்துறையினர் மாற்றியதில் நடுநாயகமாக விளங்கியவர்தான் இந்தத் தவேந்திரன்.

இவரின் தொடர்பில் இருப்பதாகக் கூறிக் கொண்டவர் தான் கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் மாமா அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டிருந்தார்.

எனினும் தவேந்திரனின் கையாள் அவிக்க முற்பட்ட பருப்பு வேகாது போக, அடுத்த முயற்சி நகுலனின் தொடர்பாளர்கள் ஊடாக எடுக்கப்பட்டது. இம்முறையும் பிரான்சிஸ் மாமாவே அணுகப்பட்டார்.

**************

கே.பி ஆங்கிலத்தில் நன்றி கூறியதும், வந்திருந்தவரின் நுனிநாக்கிலும் ஆங்கிலம் நர்த்தனமாடத் தொடங்கியது. ‘வீ நீட் எ ஹாஸ்ற் கண்ட்ரி ரு போம் எ கவன்மன்ற் இன் எக்சைல்ஸ்’ (புலம்பெயர்ந்த அரசாங்கத்தை நாங்கள் அமைப்பதற்கு அதனை அங்கீகரிக்கும் நாடு ஒன்று தேவை).

உடனே குறுக்கிட்ட இன்பம் அவரிடம் கூறினார்: “இல்லையில்லை. நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் கவன்மன்ற் இன் எக்சைல், அதாவது புலம்பெயர்ந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, அதாவது ரிறான்ஸ் நசனல் கவன்மன்ரை, உருவாக்கப் போகிறோம். இதனை நாங்கள் உருவாக்க எங்களுக்கு எந்த நாட்டின் அங்கீகாரமும் தேவையில்லை.”

அப்பொழுது கே.பி பேசினார்: “நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவதற்கு எந்த நாட்டின் அங்கீகாரமும் தேவையில்லை என்றாலும், எங்கடை திட்டத்திற்கு அமெரிக்கா, இந்தியா, நோர்வே ஆகிய நாடுகளின் ஆதரவு இருக்கு. தன்ரை நண்பர் ரம்சே கிளார்க் ஊடாக இதுபற்றி முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அஸ்லி வில்ஸ் அவர்களோடு தான் கதைத்ததாகவும், அதற்கு அவர் முழு ஆசீர்வாதமும் வழங்கியிருப்பதாகவும் என்னிடம் கதைக்கும் போது ருத்ரா சொன்னார்.” நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு வழங்கினால், அதன் தாளத்திற்கு நோர்வேயும் ஆடும் என்பது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு நன்கு தெரியும்.

அப்பொழுது மீண்டும் கே.பி கூறினார்: “நான் நோர்வே அமைச்சர் எரிக் சுல்கைமோடு கதைத்திருக்கிறேன். ஆள் நல்ல மனுசன். அமைதி வழியில் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எல்லா வழிகளிலும் தான் உதவி செய்வன் என்று என்னிடம் அவர் கூறியிருக்கிறார். நாடுகடந்த அரசாங்கம் உருவாக்கப்படுவதை அவரால் பகிரங்கமாக வரவேற்க முடியாது விட்டாலும், அதனை எதிர்க்க மாட்டார். சில டிப்ளோமற்றிக் புரோட்டோக் கொல்ஸ் (இராசரீக நடைமுறைகள்) இருக்குது. அதன் படி ஆள் நடப்பார். ஆனால் எங்களுக்கு அவரின் ஆசீர்வாதமும் இருக்குது...”

“இதற்கு இந்தியாவின் ஆதரவும் உண்டா...?”

வந்திருந்தவர் கேட்ட கேள்விக்குப் பதில்கூறாது கே.பியும், இன்பமும் ஒருவரையயாரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் கே.பி கூறினார்: “எங்களோடு எம்.கே.நாராயணன் தொடர்பில் தான் இருக்கிறார்.'' இப்படிக் கே.பி கூறியதும் வந்திருந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டிச் செயற்பட்டவர் எம்.கே.நாராயணன். இத்தனைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எம்.கே.நாராயணன் விரோதம் கொள்ளும் அளவிற்கு அவருக்கோ, அன்றி அவருக்கு நெருக்கமானவர்களுக்கோ தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தத் தீங்கும் இழைத்ததில்லை. 1985ஆம் ஆண்டு பங்குனி மாதம் தமிழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பொழுது, தலைவர் அவர்களையும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் திருப்பதிக்கு அழைத்து இருவருடனும் உரையாடியவர் எம்.கே.நாராயணன். அப்பொழுது அவர் இந்திய உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி. நிறுவனத்தின் அதிபராகப் பதவி வகித்து வந்தார்.

ஜே.என்.டிக்சிட்டின் மரணத்தின் பின்னர் 04.01.2005 அன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்ட பொழுது, அதனை புதுடில்லியுடன் நல்லுறவைக் கட்டியயழுப்புவதற்கு கிடைத்த நல்வாய்ப்பாகவே அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் பார்த்தார்கள். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தது போன்று பதவிக்கு வந்ததும் அவர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணுவதில் எம்.கே.நாராயணன் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. மாறாக எரிக் சுல்கைம் டில்லி சென்று வந்த சில தடவைகள் மட்டும் அவர்களின் ஊடாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எம்.கே.நாராயணன் செய்தி அனுப்பினாரே, அதற்கு அப்பால் அவருடன் கூட நேரடித் தொடர்புகள் எவற்றையும் எம்.கே.நாராயணன் பேணியதில்லை.

இப்படியிருக்கும் பொழுது தன்னுடன் எம்.கே.நாராயணன் தொடர்பில் இருக்கின்றார் என்று கே.பி கூறியது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருந்தது. மீண்டும் கே.பி பேசினார்: “ருத்ராவோட கிட்டத்தட்ட மூன்று வருசமாக சிங் என்கிற இந்தியன் சீனியர் கொன்சியுலர் ஒவிசர் (இராசதந்திர தகமை பெற்ற விசா விவகார அதிகாரி) ஒருவர் ஊடாக எம்.கே.நாராயணன் தொடர்பில் இருக்கிறார். நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை எம்.கே.நாராயணனிடம் சிங் சொன்ன போது அது நல்ல விடயம் என்று எம்.கே.நாராயணன் சொன்னவராம். இதை ருத்ரா மூலம் என்னிடம் தெரிவிக்கச் சொல்லி சிங்கிடம் எம்.கே.நாராயணன் சொன்னவராம் என்றால் பாருங்கோவன்...” இவ்வாறு கே.பி கூறிய பொழுது, தான் எதோ பெரும் சாதனை செய்திருப்பது போன்ற பெருமிதம் அவரது முகத்தில் தென்பட்டது.

இப்பொழுது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்குத் தலைசுற்றத் தொடங்கியது. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தேடப்படுபவர்களில் கே.பி முக்கியமானவர். அப்படிப்பட்டவருக்கு எம்.கே.நாராயணன் செய்தி அனுப்புகின்றார் என்றால், அதில் உறைந்திருந்த பயங்கரப் பின்னணியைப் புரிந்து கொள்வது வந்திருந்தவருக்கு கடினமாக இருக்கவில்லை.

**********************

பாரிசில் உள்ள ஈழமுரசு நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள அறையயான்றில் அனல்பறக்க நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் மாமா தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் ஈழமுரசு நிறுவனத்தின ஊடகவியலாளர்கள் - நிர்வாகிகள் அமர்ந்திருக்கின்றார்கள். எல்லோரின் கண்களிலும் அனல் தெறிக்கின்றது. மறுமுனையில் நகுலன் பேசிக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு வார்த்தைகளையும் நகுலன் பேசப் பேச, பிரான்சிஸ் மாமாவின் கண்கள் சிவக்கின்றன. சுற்றியிருந்தவர்களும் வெடித்துக் கிளம்பத் தயாராகும் எரிமலை போன்ற சீற்றத்தோடு நகுலன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது நகுலன் கூறுகின்றார்: “இப்ப நாங்கள் தான் நாட்டிலை இயக்க ஒழுங்குகளைப் பார்க்கிறோம். தலைவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டது உண்மை. இது பற்றி பத்மநாதன் அண்ணை வெளியிட்ட அறிக்கையை நீங்கள் உங்கடை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும். அப்போது தான் அதை மக்கள் நம்புவீனம்...” அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்த பிரான்சிஸ் மாமா, வெடித்தெழு
கின்றார்: “இதைச் சொல்லுறதுக்கு நீ யாரடா..? தலைவர் இல்லையயன்று எந்தத் துணிச்சலில் நீ சொல்லுவாய்...?” அத்தோடு சில அனல்தெறிக்கும் கொடுந்தமிழ்ச் சொற்களையும் பிரான்சிஸ் மாமா பிரயோகிக்கின்றார். அதை வேறு யாராவது கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் அவமானம் தாங்காமல் அழைப்பைத் துண்டித்திருப்பார்கள்.

ஆனால் நகுலன் அப்படிச் செய்யவில்லை. மிகவும் அமைதியாக, எவ்வித கோபத்தையும் காண்பிக்காது பதில் கூறுகின்றார்: “நீங்கள் நிலைமையை விளங்கிக் கொள்ளுங்கோ. கள யதார்த்தம் விளங்காமல் கதைக்காதையுங்கோ. அண்ணை வீரச்சாவைத் தழுவிக் கொண்டு விட்டார்...”

அவ்வளவுதான், கோபத்தின் உச்சத்திற்கு பிரான்சிஸ் மாமா சென்றுவிடுகிறார். ஆனால் நகுலனின் இந்தக் கூற்றுக்குப் பிரான்சிஸ் மாமாவின் பதில் எப்படியிருக்கும் என்பதுசுற்றியிருந்த ஈழமுரசின் ஊடகவியலாளர்கள் நிர்வாகிகளுக்கு முற்கூட்டியே புரிந்திருந்தது.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு