ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 4

வெள்ளி மார்ச் 09, 2018

கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக...
- கலாநிதி சேரமான்


மலேசியாவில் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்ட கேள்வி நகுலனை திகைப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ, ஒரு கணம் நகுலன் எதுவும் பேசவில்லை. பின்னர் நகுலன் கூறினார்:

‘இது எங்கடை கட்டுப்பாட்டுப் பகுதி. இதுக்குள்ள ஆமி நுழைய முற்பட்டால் எங்களுக்கு உடனடியாகத் தகவல் வரும். அதனால் இங்கு ஆமிக்காரங்கள் திடீரென்று அம்புஸ் அடிப்பதற்கு வாய்ப்பில்லை.’

ஆனால் நகுலன் கூறிய பதில் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கவில்லை. கடவாணைக்குளம் என்பது 22.02.2002 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பொழுது திருமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. சமாதான காலத்தில் வன்னிக்கு மட்டுமன்றி, தென்தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்த பகுதிகளுக்கும் சென்று வந்தவர் என்ற வகையில் கடவாணைக்குளம் எங்கிருக்கின்றது என்பதும், அங்கு எப்படியான ஏற்பாடுகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். 

கடவாணைக்குளம் என்பது திருமலை மாவட்டத்தில் தம்பலகாமத்தை அண்டிய பகுதி. கடவாணைக்குளத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பத்தினிபுரம் பகுதியில் சிறீலங்கா கடற்படையின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. இதனை விட சிங்களக் குடியேற்றப் பகுதிகளான மொறவேவ, ஜெயபுர ஆகிய பகுதிகளின் ஆட்லறி எறிகணை வீச்செல்லைக்கு உட்பட்ட பகுதியாகவும் கடவாணைக்குளம் திகழ்ந்தது.

இதன் காரணமாக அங்கு பாரிய தளங்கள் எவற்றையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்திருக்கவில்லை. தவிர கடவாணைக்குளத்தின் புவியியல் அமைப்பு அங்கு அதிக அளவில் போராளிகள் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதற்கோ, அன்றி மறைந்திருப்பதற்கோ உகந்த ஒரு பகுதியாகத் திகழவில்லை. அதன் காரணமாக கடவாணைக்குளத்திற்கும், பாலம்பொட்டாறு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மினி முகாம் ஒன்றை மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்திருந்தார்கள். அங்கு பொதுவாக பத்துக்குக் குறைவான போராளிகளே தங்கியிருப்பதுண்டு.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான நிழல் யுத்தம் உக்கிரமடைந்த 2006ஆம் ஆண்டு தை மாதம் 13ஆம் நாளன்று இப்பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மினி முகாம் சிங்களப் படைகளால் தாக்கிக் கைப்பற்றப்பட்டது.

இது விடயமாகப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறையிட்டதை அடுத்து அப்பகுதியை விட்டுப் பின்னர் சிங்களப் படையினர் பின்வாங்கியிருந்தாலும், 26.07.2006 அன்று மாவிலாற்றில் யுத்தம் வெடித்ததும் கடவாணைக்குளத்தை இலக்கு வைத்துத் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களையும், எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்;டு வந்த சிங்களப் படையினர் 2007ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தார்கள். மாவிலாறு, சம்பூர், வாகரை, குடும்பிமலை, படுவான்கரை ஆகிய பகுதிகளை சிங்களப் படையினர் கைப்பற்றியமை மட்டுமே அக்காலப் பகுதியில் தமிழ் ஊடகங்களில் வெளிவந்திருந்தால், கடவாணைக்குளம் பகுதியை சிங்களப் படைகள் கைப்பற்றியதைப் பலர் அறிந்திருக்கவில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த ஒரு தகவல். இத்தகவலை அறிந்திருந்தவர்களில் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரும் ஒருவர். ஆனால் அத்தகவலை அவர் அறிந்திருந்தார் என்பது தெரியாமல், நகுலன் அம்புலிமாமா கதை கூறியது வேடிக்கையாகவே இருந்தது.

எது எப்படியோ, தனக்கு முன்னால் மிகப்பெரும் நாடகம் ஒன்றை கே.பி அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது மட்டும் அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு நன்கு புரிந்திருந்தது. அப்பொழுது யாரையோ நோக்கி நகுலன் சத்தமாக ஏசினார்: ‘டேய் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அங்காலை ஏதோ சத்தம் கேட்குது. என்னவென்று போய்ப் பார்!’

பின்னர் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரிடம் நகுலன் கூறினார்: ‘அங்காலை ஏதோ சத்தம் கேட்டது. ஏதும் காட்டு மிருகங்களாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அலேற்றாக (விழிப்பாக) இருக்க வேண்டும் தானே?’

நாடகம் கனக்கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. தான் ஏதோ காட்டுக்குள் நிற்பது போலவும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவது போலவும் நகுலன் பாசாங்கு செய்வது அவருக்குப் புரிந்தது.

அப்பொழுது அவர் நகுலனிடம் கேட்டார்: ‘இப்ப அண்ணளவாக எத்தனை போராளிகள் உங்களின் தலைமையில் கீழ் நிற்கின்றார்கள்?’

சிறிது நேரம் யோசிப்பது போன்ற சில வினாடிகளைக் கடத்தி விட்டு நகுலன் கூறினார்: ‘எங்களோடை ஆயிரத்து ஐநூறு போராளிகள் நிற்கீனம். எல்லோரும் ஒவ்வொரு இடங்களில் பிரிஞ்சு பிரிஞ்சு நிற்கிறம். கே.பி அண்ணையின் தலைமைத்துவத்தை ஏற்று நாங்கள் செயற்படுகிறம். களத்தில் எங்களுக்குப் பொறுப்பாக ராம் அண்ணை நிற்கிறார்.’

இவ்வளவு தகவலையும் சிறீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பின் ஊடாக நகுலன் கூறியது, கே.பியின் பிடியின் சிக்கியிருந்தவரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. சிறீலங்கா தொலைத்தொடர்பு நிறுவத்தின் ஊடாகச் செல்லும் சகல தொலைபேசி அழைப்புக்களையும் கண்காணிக்கும் தொழில்நுட்பம் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு இருந்தது. பன்னாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் செய்கோள் தொலைபேசி இணைப்புக்கள் சிலவற்றைக் கூட ஒட்டுக்கேட்டும் ஆளுமை சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு இருந்தது. அக்காலப்பகுதியில் ஸ்கைப் இணையவழி அழைப்புக்களை ஒட்டுக்கேட்பதற்கான தொழில்நுட்பம் மட்டுமே சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஸ்கைப் இணையவழித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே கொழும்பில் உள்ள இந்திய இராசதந்திரிகள் தொடர்புகளைப் பேணி வந்தார்கள். யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது சிறீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பின் ஊடாக தான் தங்கியிருக்கும் இடம், தங்களுடன் நிற்கும் போராளிகளின் எண்ணிக்கை போன்றவற்றை நகுலன் கூறியது அவர் பொய்யுரைக்கின்றார் என்பதையே புலப்படுத்தியிருந்தது.

அப்பொழுது நகுலன் பேசினார்: ‘இப்போதைய உலக ஒழுங்கில் இனிமேல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை. சர்வதேச சமூகத்தோடு பேசி ஒரு தீர்வை நாங்கள் எடுக்க வேண்டும். அதற்குத் தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பத்மநாதன் அண்ணை உருவாக்கப் போகிறார். அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்னும் சில நாட்களில் எங்களின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் மலேசியாவிற்கு வருவார். இங்கு நிற்கும் எங்களின் சார்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்க அவர் உதவி செய்வார்.’

மட்டக்களப்பில் இருந்து, அதுவும் சிங்களப் படைகளின் கண்காணிப்பில் இருந்து, மலேசியாவிற்கு வருவது ஏதோ சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு வருவது போல் இலகுவானது போன்ற தொனியில் நகுலன் பேசியது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. அதுவும் அவுஸ்திரேலியாவில் இருந்து கம்போடியா போய், அங்கு இரண்டு நாட்களைக் கழித்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் தான் மலேசியா வந்திருக்கும் பொழுது, மட்டக்களப்பில் இருந்து மிகவும் இலகுவாக மலேசியாவிற்குத் தயாமோகன் வரப்போகின்றார் என்றால், இதன் பின்னணியில் ஏதோ ஒரு பெரும் சூட்சுமம் இருக்கின்றது என்பது மட்டும் கே.பியில் பிடியில் சிக்கியிருந்தவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

அப்பொழுது நகுலனிடம் அவர் கேட்டார்: ‘ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து முள்ளிவாய்க்காலை சிறீலங்கன் ஆமி பிடிச்சு இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இதுவரை ஏன் எந்தத் தாக்குல்களையும் நீங்கள் செய்யவில்லை? எங்கட மக்களுக்கு நடந்ததுக்கு சிறீலங்கா இராணுவத்துக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கம் உங்களுக்கு இல்லையா?’

அவ்வளவுதான் மறுமுனையில் நகுலன் எகிறிப் பாய்ந்தார்: ‘என்ன செய்யிறது என்று எங்களுக்குத் தெரியும். எப்ப அடிக்கிறது, எப்ப பேசாமல் இருக்கிறது என்று நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நீங்கள் பத்மநாதன் அண்ணையோடு சேர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்க உதவி செய்யுங்கோ. இல்லாட்டிப் பேசாமல் ஒதுங்கியிருங்கோ.’ இவ்வாறு படபடவென்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் தனது தொலைபேசி அழைப்பை நகுலன் துண்டித்தார்.

அப்பொழுது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார். அவரது எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த கே.பியின் முகத்திலும், அவரது தாளத்திற்கு அரசியல் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த இன்பம் அவர்களின் முகத்திலும் அசடு வழிந்து கொண்டிருந்தது. தனது பிடியில் சிக்கியிருந்தவரை நகுலனின் உதவியுடன் தனது தலைமைத்துவத்தை ஏற்க வைப்பதற்கு கே.பி அவர்கள் எடுத்த முயற்சி மண்கவ்வியிருந்தது. 

கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகவே இப்பொழுது கே.பியின் நிலை காணப்பட்டது. ஆனால் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரோ எதுவுமே நடக்காதது போல் மீண்டும் கே.பியுடன் பேசத் தொடங்கினார்.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு (06.03.2018)