ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 2

வியாழன் பெப்ரவரி 08, 2018

கேட்பவன் கேணையன் என்றால்...
- கலாநிதி சேரமான்


‘உங்களுக்கு டயபீற்றீஸ் இருக்கோ?’

கே.பியின் பிடியில் இருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிந்தவர், கே.பி இப்படிக் கேட்ட பின்னர் தான் மீண்டும் நிஜவுலகத்திற்கு திரும்பினார். பின்னர் தான் அவருக்குப் புரிந்தது: தேனீரில் சீனியெதுவும் கலக்காது அதனைத் தான் அப்படியே அருந்துவதைப் அவதானித்து விட்டுத் தான் தன்னிடம் கே.பி இப்படிக் கேட்கின்றார் என்று.

சைகை மொழியில் ஆம் என்று அவர் பதில் கூறிய பொழுது மீண்டும் கே.பி பேசினார்: ‘நாங்கள் தோற்றுப் போய் விட்டோம். இனி ஆயுதப் போராட்டம் மூலம் எதையுமே சாதிக்க முடியாது. அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற நாடுகளின் உதவியோடு சிறீலங்கா அரசாங்கத்தோடு பேசி ஏதாவது ஒரு தீர்வை நாங்கள் எடுக்க வேண்டும். தமிழீழம் என்றெல்லாம் இனி நாங்கள் நினைச்சுப் பார்க்கவே முடியாது. அதனை இந்தியாவோ, அமெரிக்காவோ ஆதரிக்காது. எங்களுக்கு அமெரிக்காவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் தெளிவாகச் சொல்லியிருக்கினம். நீங்கள் ஆயுதப் போராட்டத்தை முழுமையாகக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய முன்வந்தால், மாநில சுயாட்சி மாதிரியான தீர்வொன்றுக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதனால் தான் நாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம்.’

கே.பி இப்படிக் கூறிக் கொண்டிருக்க வந்திருந்தவர் பெரும் குழப்பமடைந்தார். தமிழீழம் சாத்தியமில்லை என்றும், மாநில சுயாட்சி போன்ற திட்டமே சாத்தியமானது என்று கூறிக் கொண்டு எதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தைக் கே.பி முன்வைக்கின்றார் என்பது அப்பொழுது அவருக்குப் புரியவில்லை.

மீண்டும் கே.பி பேசினார்: ‘களத்தில் நிற்கின்ற போராளிகள் எல்லோரும் என்னுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கீனம். நான் என்ன சொல்கின்றேனோ, அதை அவையள் செய்வீனம். இனி ஆயுதப் போராட்டம் நடக்காது. இப்ப எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை எங்கடை வெளிநாட்டுக் கிளைகளும், கஸ்ரோவின்ரை பொடியன்களும் தான்.’

***

இங்கிலாந்தின் வடகோடியில் ஸ்கொட்லாந்து செல்லும் பாதையில் அமைந்திருக்கும் நகரம் அது. அங்கு வணிக நிலையம் ஒன்றை நடத்தும் அவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளரும் கூட. தனது தொலைபேசியில் இருந்து ஏறத்தாள இரண்டு வாரமாக அவரும் இரண்டு தொலைபேசி எண்களுக்கு மாறி மாறி அழைப்பை ஏற்படுத்திக் களைத்துப் போயிருந்தார்.

0094716693013 என்ற எண்ணிற்கு முதலில் அழைப்பை எடுப்பதும், அதற்குப் பதில் வராத பொழுது 0094719501597 என்ற எண்ணிற்கு அழைப்பை எடுப்பதும், இரண்டு எண்களில் இருந்தும் பதில் வராத பொழுதும், மீண்டும் சளைக்காது ஒவ்வொரு நாளும் அவர் அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தவாறே இருந்தார். 18.05.2009 முள்ளிவாய்க்காலை சிங்களப் படைகள் கைப்பற்றியதில் இருந்து அவரது முயற்சி ஆரம்பித்தது.

2003ஆம் ஆண்டு சமாதான காலப் பகுதியில் வன்னி சென்றிருந்த பொழுது அப்பொழுது சார்ள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக விளங்கிய நகுலன் அவர்களை சந்திப்பதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. நகுலனுடன் அரை மணிநேரம் தான் அவர் உரையாடியிருப்பார். அவ்வளவுதான் நகுலனுடனான அவரது உறவு.

திடீரென 10.06.2007 அன்று சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் இணையத்தளத்தில் அதிர்ச்சிகரமாக செய்தியொன்றை அவர் படிக்க நேரிட்டது. 23.05.2007 அன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதி நகுலன் களப்பலியானார் என்பதுதான் அந்தச் செய்தி. முதலில் அவரால் அச் செய்தியை நம்ப முடியவில்லை. ஆனால் நகுலன் களப்பலியானார் என்ற செய்தியை மட்டும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிடவில்லை. நகுலனின் உடலுடன் கைப்பற்றப்பட்டதாகக் கூறி தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட நகுலனின் அடையாள அட்டையையும் அது வெளியிட்டிருந்தது. அந்த அடையாள அட்டையில் நகுலனின் படம் பொறிக்கப்பட்டிருந்ததோடு, அவரது சொந்தப் பெயரான சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்ற பெயரும், இயக்கப் பெயரான நகுலன் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இது நடந்து பதினான்கு மாதங்களுக்குப் பின்னர் 17.08.2008 அன்று அவருடன் நகுலனின் நெருங்கிய உறவினர் என்று கூறிக் கொள்ளும் இலண்டனில் வசிக்கும் ஒருவர் தொடர்பு கொண்டு, நகுலன் அம்பாறைக் காடுகளில் நிற்பதாகவும், அவருடன் உரையாட விரும்புவதாகவும் கூற, அவர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். நகுலனுடன் நேரடியாக உரையாடுவதற்கு 0094716693013 என்ற தொலைபேசி எண்ணும் அவருக்கு வழங்கப்பட்டது. களப்பலியானார் என்று ஓராண்டாகத் தான் கருதியிருந்தவர் உயிருடன் இருப்பதைக் கேள்வியுற்றதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. மறுபுறம் தென்தமிழீழத்தை முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக சிங்களம் இறுமாந்திருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழிப் படையணியொன்றின் சிறப்புத் தளபதி அம்பாறையில் நிற்பது அவருக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை அளித்தது.

அன்று முதல் நகுலன் கேட்ட உதவிகளை இங்கிலாந்தில் இருந்தவாறு அவர் செய்து வந்தார். நகுலன் அடையாளம் காட்டிய மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வசித்து வந்த ஒருவர் ஊடாகவே அவரது உதவிகள் அம்பாறைக் காடுகளில் நின்ற போராளிகளுக்குச் சென்றடைந்தன.

18.05.2009 வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஏறத்தாள இரண்டு வாரங்களாக நகுலனுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவிய நிலையில், நகுலனுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சமே அவரைப் பீடித்திருந்தது. போதாக்குறைக்கு 26.05.2009 அன்று பி.பி.சி தமிழோசைக்குச் செவ்வி வழங்கிய அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்ததோடு, கே.பியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவித்திருந்தார்.

இறுதி முயற்சியாக மீண்டும் ஒரு தடவை 0094716693013 என்ற எண்ணிற்கு அவர் தொடர்பெடுத்த பொழுது, ஆகூழ் அவரது பக்கம் திரும்பியிருந்தது.

‘ஹலோ வணக்கம். என்ன நடக்குது?’

அந்தக் குரலைக் கேட்டதுமே பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்த அவர் பேசத் தொடங்கினார்: ‘என்ன மாதிரி நகுலன் அண்ணை? உங்களோடு தொடர்பு கொள்வதே கஸ்ரமாக இருக்கிறது. உண்மையான நிலைமை என்ன?’

‘இஞ்சை சரியான சிக்கல். வன்னியிலை நின்ற ஆமிக்காரன்களை எல்லாம் இஞ்சை மட்டக்களப்பிலையும், அம்பாறையிலும் கொண்டு வந்து குவிக்கிறாங்கள். நாங்கள் நிற்கிற இடத்துக்குப் பக்கத்திலை இன்றைக்குக் ஒரு பஸ்சில் ஆமிக்காரன்களைக் கொண்டு வந்து குவிச்சவங்கள்.’

நகுலனின் குரலில் பதற்றம் தென்பட்டது. வழமையாக உரையாடும் பொழுது இருக்கும் உற்சாகம் அன்று அவரது குரலில் இல்லை. மீண்டும் அவர் நகுலனிடம் வினவினார்: ‘கே.பிதான் இயக்கத்தின்ரை புதிய தலைவர் என்று இரண்டு நாளைக்கு முன்னர் தயாமோகன் அறிவிச்சவர். உண்மையிலை என்ன நடக்குது? தயாமோகனுக்கு என்ன நடந்தது?’

‘தயாமோகன் லூசு வேலை பார்த்துப் போட்டுது. ராம் அண்ணை ஆளைக் கூப்பிட்டு நல்லா ஏச்சுக் கொடுத்தவர். அப்படி ஒன்றும் கே.பியை நாங்கள் தலைவராக நியமிக்கவில்லை. நாங்கள் இப்ப யாழ்ப்பாணம் போக முயற்சி செய்கிறோம். இங்கே கிழக்கிலை தொடர்ந்து நிற்க ஏலாது. என்னோடு நின்ற பெண் போராளி ஒருவரை இன்று காலை தான் பஸ்சில் ஏற்றி வவுனியாவுக்கு அனுப்பி வைச்சனான். அவா யாழ்ப்பாணம் போனதும் அங்குள்ள நிலைமையைப் பார்த்து நாங்களும் யாழ்ப்பாணம் போகப் போறம். இப்ப என்னட்டை அண்ணை தந்த ரைபிள் மட்டும் தான் இருக்கு.’

இப்படி நம்பிக்கையீனத்துடன் நகுலன் கூறினாலும், அது அவருடன் உரையாடியவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலேயே இருந்தது.

அவர் மீண்டும் கேட்டார்: ‘கே.பிதான் இனித் தலைவர் என்று இஞ்சை கொஞ்சப் பேர் குழப்பம் செய்கின்றாங்கள். அதெல்லாம் உண்மையில்லை தானே? நீங்களும், ராம் அண்ணையும் தானே களத்திலை நிற்கின்றீர்கள்?’

அப்பொழுது நகுலன் கூறினார்: ‘ஓம், இஞ்சை ராம் அண்ணை தான் எங்களுக்குப் பொறுப்பு. இஞ்சை இருந்து கொண்டு எல்லா முடிவுகளும் ராம் அண்ணை எடுப்பார். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.’

***

‘இனி ஆயுதப் போராட்டம் நடக்காது, சுயாட்சி மாதிரி ஏதாவது ஒன்றைத் தான் பெற முடியும் என்று நீங்கள் எவ்வாறு கூற முடியும்? இதில் தலைவரின் நிலைப்பாடு என்ன? நீங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்குத் தலைவர் உங்களுக்கு அனுமதி தந்தவரா?’ என்று கே.பியை மேலும் பேசவிடாது வந்திருந்தவர் அவரை மடக்கிக் கேட்டார்.

உடனே கே.பியின் முகம் சிவந்தது. தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி விட்டு வந்திருந்தவரை சில நொடிகள் உற்றுப் பார்த்தார். அவரது பார்வையில் அனல் தெறித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது இன்பம் பேசினார்: ‘அண்ணை ஒரு விசயத்தை விளங்கிக் கொள்ளுங்கோ. தலைவர் கே.பி அண்ணையைத் தான் கைகாட்டி விட்டுப் போயிருக்கின்றார். தலைவர் விட்டுச் சென்ற பணியைத் தான் கே.பி அண்ணை தொடரப் போகின்றார். கடைசியாக கே.பி அண்ணையோடை நாலு மணிநேரம் சற்றலைற் ரெலிபோனில் கதைச்சுப் போட்டுத்தான் தலைவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர். நீங்கள் கே.பி அண்ணையை சந்தேகப்படுவது தலைவரை சந்தேகப்படுவதற்கு ஒப்பானது.’

இப்படி இன்பம் கூறியதும், ‘கேட்கிறவன் கேணையன் என்றால் எலியும் ஏரோப் பிளேன் ஓட்டுமாம்’ என்று தமிழ் திரைப்படங்களில் வரும் எள்ளிநகையாடல் வசனம் தான் வந்திருந்தவரின் நினைவுக்கு வந்தது.

முதலில் கே.பியுடன் தமிழீழ தேசியத் தலைவர் உரையாடினாரா? என்பதே சந்தேகத்திற்குரியது. தவிர நான்கு மணிநேரம் தொடர்ச்சியாக உரையாடுவதற்குத் தேசியத் தலைவரின் செய்கோள் தொலைபேசியின் மின்கலனில் மின்சக்தி இருந்ததா? என்ற கேள்வியும் இருந்தது. அப்படியிருக்க தன்னுடன் தலைவர் அவர்கள் உரையாடினார் என்று கே.பி கூறியது அப்பட்டமான பொய் என்பது வந்திருந்தவருக்குத் தெரிந்திருந்தது.

அப்பொழுது மீண்டும் கறுப்புக் கண்ணாடியை அணிந்தவாறு கே.பி பேசினார்: ‘உங்களுக்கு ஒரு விசயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடைசிக் கட்டத்திலை தலைவரோடு கதைக்கும் போது தளபதிகள் கேட்டார்கள். நாங்கள் இஞ்சை கடைசி வரை நின்று அடிப்பட்டு இறந்தால் எங்கள் மக்களையும், போராளிகளையும் யார் பார்ப்பார்கள்? என்று. அதற்குத் தலைவர் சொன்னார்: கே.பி இருக்கிறான். அவன் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வான். தலைவரே என்னை முழுமையாக நம்பினவர். எனவே என்னை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்.’

ஆனால் வந்திருந்தவர் விடவில்லை: ‘நீங்கள் தலைவர் இல்லை என்கிறீர்கள். ஆனால் தலைவர் பாதுகாப்பாக இருக்கின்றார். சரியான நேரத்தில் வெளியில் வருவார் என்று இயக்கத்தின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அறிவழகன் என்ற பொறுப்பாளர் ஒருவர் அறிவித்திருக்கிறாரோ?’

உடனே குறுக்கிட்ட இன்பம்: ‘அறிவழகன் என்று நீங்கள் சொல்கிற விநாயகம் அவசரப்பட்டு அப்படி அறிக்கை விட்டு விட்டார். இப்ப நாங்கள் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றோம். அவரோடு கதைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் பொட்டம்மானின் வலது கை. இப்ப இந்தியாவில் நிற்கின்றார். விரைவில் கே.பி அண்ணையின் தலைமைத்துவத்தை ஏற்று விநாயகம் அறிக்கை வெளியிடுவார்.’

ஆனாலும் இதற்கெல்லாம் மசிந்து போகும் மனோநிலையில் வந்திருந்தவர் இருக்கவில்லை. சிங்கத்தின் கையில் சிக்கிய எலியின் நிலையில் தான் இருந்தாலும், தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை கே.பி மறுதலிப்பதையோ, தன்னைத் தானே தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக கே.பி பிரகடனம் செய்வதையோ அவரால் ஏற்க முடியவில்லை. எனவே கே.பியிடம் அவர் மீண்டும் கேட்டார்: ‘களத்தில் ராம், நகுலன் போன்ற தளபதிகள் நிற்கின்றார்கள். அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நெடியவனும், கஸ்ரோவின் பொடியன்களும் சொல்கின்றாங்கள். தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நெடியவன் அடித்துக் கூறுகின்றார். தலைவர் இருக்கின்றார் என்று பழ.நெடுமாறன் ஐயாவும், வைகோவும் அடித்துச் சொல்லுகிறார்கள். பிறகு நீங்கள் எப்படித் தலைவர் இல்லை என்று இங்கிருந்தவாறு உறுதியாகக் கூற முடியும்?’

அவ்வளவு தான். சட்டெனத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த கே.பி, வந்திருந்தவரிடம் சீறிப் பாய்ந்தார்: ‘அவன் நெடியவனின்ரை கதையை விடுங்கோ. அவனிட்டை இருநூறு மில்லியன் டொலர் தா, கள நிலவரத்தை மாற்றுவதற்கான ஆயுதங்களை உடனே அனுப்பி வைக்கிறேன் என்று போன டிசம்பர் மாதம் சொன்னனான். சும்மா சாம்ராஜ்ஜை ஆபிரிக்காவுக்கு அனுப்பி அவன் ஆபிரிக்கன் மாபியாவிட்டை பிடிபட்டுவிட்டான் என்று பேய்க்காட்டிப் போட்டு இருந்தவன். சரி, உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நகுலனின் ரெலிபோன் நம்பர் தாறன். அடிச்சுக் கேளுங்கோ. நகுலன், ராம், தயாமோகன், விநாயகம் எல்லாரும் என்ரை தலைமைத்துவத்தை ஏற்றுத்தான் நிற்கின்றார்கள்.’ இவ்வாறு கூறியதோடு கே.பி நின்று விடவில்லை. நகுலனுடன் உரையாடுவதற்கென்று ஒரு தொலைபேசி எண்ணையும் வந்திருந்தவரிடம் கொடுத்தார்.

அந்த எண் இதுதான்: 0094719501597

(மடையுடைப்புத் தொடரும்)  

நன்றி: ஈழமுரசு (06.02.2018)