ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 16

சனி ஓகஸ்ட் 25, 2018

இலண்டனில் இருந்து வன்னிக்கு ஓடாத கப்பல்
- கலாநிதி சேரமான்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களில் ஒரு தொகுதியை வைத்திருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான காந்தலிங்கம் பிறேமரெஜி என்றழைக்கப்படும் கே.பி.ரெஜி அவர்களைத் தமது நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்குக் கே.பி (கண்ணாடி பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன்) ஊடாகச் சிங்களம் கையாண்ட யுக்தி பற்றிக் கடந்த பத்தியில் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருந்தோம். இது பற்றி விலாவாரியாக நாம் எழுதுவதற்கு முன்னர் ரெஜி பற்றிய சில உண்மைகளை நாம் பதிவு செய்தாக வேண்டும்.

இதற்கு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களை நோக்கி, அதாவது 11.05.2009 என்ற திகதியையும், அதற்குப் பின்னரான ஒரு வார காலப்பகுதியையும் நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்கின்றோம்.

பிரித்தானியத் தலைநகர் இலண்டனின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள அல்பேர்ட்டன் (Alperton) பகுதியில் உள்ள அடுக்குமாடி அலுவலகத் தொகுதி அது. 497 சண்லீ றோட் (497 Sunleigh Road) எனப்படும் முகவரியில் உள்ள அஜெய் பிசினஸ் சென்ரர் (Ajay Business Centre) எனப்படும் அந்த அடுக்குமாடி அலுவலகத் தொகுதி இந்திய தொழிலதிபர்களுக்குச் சொந்தமானது. அங்குள்ள இரண்டு அறைகளையும், சந்திப்புக் கூடம் ஒன்றையும் ரெஜி வாடகைக்கு எடுத்திருந்தார்.

11.05.2009 அன்று மாலை 7:00 மணியிருக்கும்.

அவர் ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர். அக்காலப் பகுதியில் தமிழ்த் தேசிய ஊடகமாக ஐ.பி.சி தமிழ் வானொலி இயங்கிய பொழுது அதன் தலைமை செய்தியாசிரியராகப் பொறுப்பு வகித்தவர். விமானம் மூலம் எகிப்து தலைநகர் போய், அங்கிருந்து தொடருந்து மூலம் சுயஸ் கால்வாயை (Suez Canal) சென்றடைந்து, அங்கு வெள்ளி (15.05.2009) அல்லது சனி (16.05.2009) நங்கூரமிட உத்தேசித்திருந்த வணங்கா மண் கப்பலில் ஏறி, முள்ளிவாய்க்கால் சென்று அங்குள்ள நிலைமைகளை வெளியுலகிற்கு கொண்டு வருவது தான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணி. 11.05.2009 அன்று மதியம் தான் அவருக்கு அந்தப் பணி வழங்கப்பட்டிருந்தது.

இவ் வேளையில் வாசர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். வணங்கா மண் கப்பல் திட்டம் இலண்டனில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. கப்பலும் இலண்டனில் இருந்து புறப்படுவதாகத் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்கத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக, இலண்டனில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் எதற்காக விமானம் மூலம் எகிப்து சென்று பின்னர் வணங்கா மண் கப்பலில் ஏற வேண்டும்?

நடந்தது இதுதான். வன்னியில் யுத்தம் தீவிரமடைந்து வன்னி கிழக்கு நோக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கத் தொடங்கிய பொழுது புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மருத்துவர்கள் குழு ஒன்றை வன்னிக்கு அனுப்புவதற்கான திட்டம் ஒன்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து 18.02.2009 அன்று தமிழ்நெற் (Tamilnet) இணையத்திற்கு செவ்வி வழங்கிய புலம்பெயர் மருத்துவர்களான சிவகணேசன் (நோர்வே), மனோமோகன் (அவுஸ்திரேலியா) ஆகியோர், மருத்துவர் குழுவொன்றை அழைத்துக் கொண்டு வன்னி செல்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கு சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியைத் தாம் வாழும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சுக்கள் பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இது விடயத்தில் சாதகமான பதிலை சிறீலங்கா அரசாங்கம் தெரிவிக்க மறுத்ததை அடுத்து, புலம்பெயர் தேசங்களில் இருந்து கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதில் மருத்துவர்களை ஏற்றி அவர்களை வன்னிக்கு அனுப்பி வைக்குமாறு வன்னியில் இருந்து கோரப்பட்டது. இதுதான் வணங்கா மண் திட்டம் உருப்பெற்றதன் நதிமூலமும், ரிசிமூலமும் ஆகும். இத்திட்டத்திற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்குமாறு ரெஜி அவர்களிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் பணிப்புரை விடுக்க, உடனே இது பற்றிய அறிவிப்பை மருத்துவர் வே.அருட்குமார் என்பவர் 10.03.2009 அன்று தமிழ்நெற் இணையத்திற்கு வழங்கிய செவ்வி மூலம் விடுத்தார். அப்பொழுது திட்டத்தின் பெயர் வணங்கா மண் என்று அறிவிக்கப்படவில்லை. மாறாக மேர்சி மிசன் (Mercy Mission) (மனிதநேய நடவடிக்கை) என்ற சொற்பதத்தைத் தான் மருத்துவர் அருட்குமார் பயன்படுத்தினார்.

இத்திட்டத்திற்குப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே கிடைத்த வரவேற்பு ரெஜி அவர்களைப் புளகாங்கிதம் அடைய வைத்திருக்க வேண்டும். அவரும் உடனே வணங்கா மண் திட்டம் பற்றித் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) ஆகியோருக்குப் படம் காட்டத் தொடங்கினார். வன்னிக்கு ரெஜி காட்டிய படத்தின் படி வணங்கா மண் கப்பலில் குறைந்தது பதினைந்து மருத்துவர்கள் (தமிழர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள்), ஐந்து அல்லது ஆறு மேலைத்தேய ஊடகவியலாளர்கள் (முற்றிலும் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய அரசியல்வாதிகள், மனிதநேய செயற்பாட்டாளர்கள் என ஒரு பட்டாளமே வன்னிக்கு வருவதாக கூறப்பட்டது. தவிர, வணங்கா மண் கப்பலில் வன்னி கிழக்கில் தங்கியிருந்த மக்களுக்கான மருந்து வகைகள் மற்றும் உணவுப் பொருட்களும் கொண்டு வரப்படும் என்றும் ரெஜி படம் காட்டினார்.

ஆனால் நடந்ததோ வேறு கதை. மருத்துவர் அருட்குமார் அவர்களைத் தவிர வேறு எந்த தமிழ் மருத்துவர்களும் கப்பல் மூலம் வன்னி செல்வதை விரும்பவில்லை. வெள்ளையின மருத்துவர்களின் நிலையும் அதேதான். இதே கதைதான் ஊடகவியலாளர்களின் விடயத்திலும் நடந்தது. வெள்ளையின ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல. எந்தவொரு தமிழ் ஊடகவியலாளரும் கப்பல் மூலம் வன்னி செல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அணுகப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவரது பெயர் பரா பிரபா (லிபரா நிறுவனத்தின் பினாமியாக நின்று 2014ஆம் ஆண்டின் இறுதியில் ஐ.பி.சி வானொலியை விலைக்கு வாங்கிப் பின்னர் அதனை லிபரா நிறுவனத்தின் பினாமிகளிடம் ஒப்படைத்தவர் இவர்). முன்னர் ஒரு காலத்தில் ஐ.பி.சி தமிழ் வானொலியின் துணை செய்தியாசிரியராகப் பணிபுரிந்து, ஐ.பி.சிக்குள் குழப்பம் விளைவித்தமைக்காக 2004ஆம் ஆண்டின் இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் 2006ஆம் ஆண்டு மன்னிப்பு வழங்கப்பட்டு ரி.ரி.என் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர்கள் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் பரா பிரபா. 2007ஆம் ஆண்டு பிரான்சு அரசாங்கத்தால் ரி.ரி.என் தொலைக்காட்சி முடக்கப்பட்டதை அடுத்து, யூரோ தொலைக்காட்சி, ஐ.பி.சி வானொலி என சுவிற்சர்லாந்திற்கும், இலண்டனுக்கும் இடையில் தாவிக் கொண்டிருந்த பரா பிரபா அவர்கள் ரெஜியின் நண்பரும் கூட. வணங்கா மண் கப்பலில் வன்னி செல்லுமாறு பரா பிரபா அவர்களிடம் கேட்கப்பட்டதும் தான் தாமதம், ஆள் வெலவெலத்துப் போனார். வன்னி சென்றால் சிங்களப் படைகளின் எறிகணை அல்லது வான்வழித் தாக்குதலில் தான் கொல்லப்படலாம் அல்லது காயமடையலாம் என்று பரா பிரபா அஞ்சினாரோ தெரியவில்லை. தனக்கு இலண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுலையில் இருப்பதாகவும், அதனால் தன்னால் வன்னி செல்ல முடியாது என்றும் பரா பிரபா சாக்குப் போக்குக் கூறி நழுவிக் கொண்டார்.

வணங்கா மண் திட்டம் அறிவிக்கப்பட்டதோ 10.03.2009 அன்று. ஆனால் 11.05.2009 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு மேலாக, வன்னியில் இருந்து அணுகப்பட்ட எந்தவொரு தமிழ் ஊடகவியலாளரும் வன்னி செல்வதற்கு விரும்பவில்லை. இதற்குள் 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து கப்டன் அலி என்ற கப்பல் (வணங்கா மண் என்ற திட்டப் பெயருடன்) வன்னி நோக்கிப் புறப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் இலண்டனில் வசித்து வந்த ஐ.பி.சி தமிழ் வானொலியின் தலைமை செய்தியாசிரியர் 11.05.2009 அன்று மதியம் அணுகப்பட, அவரும் தயக்கமின்றி வன்னி செல்ல இணங்கினார். அதுதான் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நேரடியாக இலண்டனில் இருந்து கப்பல் ஏறாமல், கப்பல் ஏறுவதற்காக எகிப்து செல்வதற்கு அவர் தள்ளப்பட்டார்.

அந்த ஊடகவியலாளரின் பெயரை இப்போதைக்கு எக்ஸ் (X) என்று வைத்துக் கொள்வோம். எக்ஸ் அவர்கள் வன்னிக்கு செல்வதற்கு இணங்கிய அதே நாளில் நோர்வேயில் இருந்து செல்வதற்கு இன்னுமொரு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும் இணங்கினார். அவரது பெயரை வை (Y) என்று வைத்துக் கொள்வோம். இவர்களை விட இலண்டனில் வசித்து வந்த உதயணன் என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் வணங்கா மண் கப்பலில் செல்ல இணங்கியிருந்தார் (இவர் மட்டுமே கொழும்பு வரை சென்ற வணங்கா மண் கப்பலில் கடைசி வரை பயணித்தவர். சிங்களப் படைகளின் தடுப்புக் காவலில் இருந்து நீண்ட சிரமங்களின் பின்னர் இலண்டன் திரும்பியவர்). இவருடன் கிறிஸ்ரியன் (Kristjan) என்ற முன்னாள் போர்நிறுத்தக் கண்காணிப்பாளரும் சென்றிருந்தார். இவர்களை விட பிரான்சில் இருந்து எகிப்து வரை தமிழ்ப் பொறியியலாளர் ஒருவரும் வணங்கா மண் கப்பலில் சென்றிருந்தார்.

சுருக்கமாகக் கூறினால், ஒரு பட்டாளத்தையே வணங்கா மண் கப்பலில் வன்னிக்கு அனுப்பப் போவதாகப் படம் காட்டிய ரெஜி அவர்களால் உதயணன் என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரையும், அருட்குமார் என்ற மருத்துவரையும் தவிர, வேறு எவரையும் கப்பல் பயணத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை. அது மட்டுமா? வன்னி செல்வதற்கான வணங்கா மண் கப்பலைக் கூட ரெஜி அவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.

ஆம். வணங்கா மண் திட்டம் பற்றி வன்னியிலும், புலம்பெயர் நாடுகளிலும் படம் காட்டிய ரெஜியால் ஒரு கப்பலை வன்னிக்கு அனுப்புவதற்கு கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை. இது வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

நடந்தது இதுதான். வணங்கா மண் கப்பல் பற்றிய திட்டத்தை மேர்சி மிசன் என்ற பெயரில் தமிழ்நெற் இணையத்தின் ஊடாக மருத்துவர் அருட்குமார் அறிவித்த மறுகணமே புலம்பெயர் நாடுகளில் பெரும் தொகையில் நிதி திரட்டும் படலத்தை ரெஜி அவர்கள் ஆரம்பித்து விட்டார்.

ஆனால் கப்பலை மட்டும் ரெஜி ஏற்பாடு செய்யவில்லை. விரைவாக கப்பலை ஏற்பாடு செய்யுமாறு ரெஜிக்கு வன்னியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட, இலண்டன் மத்தியில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் அமைந்திருக்கும் இடத்தை அண்டியுள்ள மண்டபம் ஒன்றில் 30.03.2009 அன்று வணங்கா மண் திட்டம் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு 2 இலட்சம் பவுண்களை வழங்குவதற்கு இலண்டனில் உள்ள இந்து ஆலயங்களின் கூட்டமைப்பு இணங்கியதோடு, அங்குரார்ப்பண நிகழ்வில் இத்திட்டத்திற்கு என்று 50,000 பவுண்கள் காசோலையையும் அன்பளிப்புச் செய்திருந்தது.

இத் திட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் கணிப்பின் படி வணங்கா மண் திட்டத்திற்காக ஒன்றரை மில்லியன் பவுண்கள் வரை பணம் சேர்ந்திருந்தது. அவற்றின் பெரும்பகுதியை ரெஜி அவர்களும், அவரது பினாமிகளுமே அப்பொழுது கையாண்டார்கள். ஆனாலும் அப்பொழுது கூட வன்னிக்கான கப்பலை ரெஜி ஏற்பாடு செய்யவில்லை.
 
மறுபுறத்தில், வணங்கா மண் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இரண்டு வாரங்களில் இலட்சக்கணக்கான பவுண்கள் பெறுமதியான உடைகள், மருந்துகள், உணவு வகைகள் போன்றவையும் இலண்டனில் இருந்தும், ஏனைய நாடுகளில் இருந்தும் மக்களால் வழங்கப்பட்டன. அப்பொழுதும் கூட கப்பல் எதனையும் ரெஜி ஏற்பாடு செய்யவில்லை.

வன்னியிலோ யுத்தம் உக்கிரமடைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளோ நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருந்தன. புலம்பெயர் நாடுகளிலோ வணங்கா மண் கப்பல் பற்றிய பரப்புரைகள் தீவிரமடைந்திருந்தன. ஆனாலும் கப்பல் எதனையும் ரெஜி ஏற்பாடு செய்யவில்லை. கடைசியில் சீற்றமடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், இது பற்றி அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களிடம் தெரிவிக்க, அவர் உடனே பிரான்சில் தங்கியிருந்த ஸ்கன்டனேவிய நாட்டை வதிவிடமாகக் கொண்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரை அணுகி, அவர் ஊடாக பிரதீப் என்ற இன்னொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரின் உதவியுடன், கப்டன் அலி என்ற மத்திய கிழக்காசிய கப்பலை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அவ்வேளையில் ரெஜிக்குப் பிறப்பிக்கப்பட்ட பணிப்புரை, வணங்கா மண் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தையும், பொருட்களையும் பிரான்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதையும் கூட ரெஜி அவர்கள் முழுமையாகச் செய்யவில்லை.

பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி நாட்களை இழுத்தடித்த ரெஜி, ஒரு வழியாக 20.04.2009 அன்று திரட்டப்பட்ட மனிதநேய உதவிப் பொருட்களின் அரைவாசியை பிரித்தானியாவின் இப்ஸ்விட்ச் (Ipswich) துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஏற்றி, பிரான்சுக்கு அனுப்பினார். ஆனால் வணங்கா மண் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தையும் அனுப்பவில்லை. மிகுதி பொருட்களையும் அனுப்பவில்லை.

விளைவு: கப்டன் அலி என்ற கப்பலை வாடகைக்கு அமர்த்துவதற்கான கட்டணத்தை செலுத்த முடியாது தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். பிரித்தானியாவின் இப்ஸ்விட்ச் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலில் பிரான்சுக்கு பொருட்களை அனுப்பிய அதே 20.04.2009 அன்று பணத்தையும் ரெஜி அனுப்பியிருந்தால் ஓரிரண்டு நாட்களில் வணங்கா மண் என்ற குறியீட்டுப் பெயரைத் தாங்கியவாறு கப்டன் அலி என்ற கப்பல் வன்னி நோக்கிப் புறப்பட்டிருக்கும். ஒருவேளை யுத்தம் நிறைவடைவதற்கு முன்னரே அது முள்ளிவாய்க்கால் கடற்பரப்பை அடைந்திருக்கும். ஆனால் திரட்டப்பட்ட பணத்தை அனுப்பி வைக்காமல் ரெஜி இழுத்தடித்ததால் 07.05.2009 வரை பிரான்சை விட்டுக் கப்டன் அலி என்ற கப்பல் புறப்படவேயில்லை.

பலத்த இழுபறிக்குப் பின்னர் ஒருவாறு கப்பலை வாடகைக்கு அனுப்புவதற்கான பணத்தை பிரான்சுக்கு ரெஜி அனுப்பி வைத்தார். ஆனால் பணம் முழுமையாக பிரான்சை சென்றடையவில்லை. வெறுமனவே 60,000 யூரோக்கள் மட்டுமே ரெஜி அவர்களால் பிரான்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பின்னர் வன்னி செல்ல இணங்கிய நோர்வேயைச் சேர்ந்த வை என்ற பெயரில் இப்பத்தியில் நாம் விளித்திருக்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் கனடாவில் இருந்து புதிதாக திரட்டப்பட்ட ஒரு தொகுதி பணத்தைத் தருவிக்க, பிரான்சில் உள்ள இன்னுமொருவர் மிகுதித் தொகைப் பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்க, 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து ஒருவாறாக கப்டன் அலி என்ற கப்பல் புறப்பட்டது.

இது தான் 10.03.2009 அன்று மேர்சி மிசன் என்ற பெயரில் மருத்துவர் அருட்குமார் அவர்களால் அறிவிக்கப்பட்ட வணங்கா மண் திட்டக் கப்பல், ஏறத்தாள இரண்டு மாதங்களின் பின்னர், அதுவும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் ஒன்றான 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து எகிப்து வழியாக வன்னி நோக்கிப் புறப்பட்டதன் சூட்சுமமாகும்.

வணங்கா மண் கப்பலை உரிய நேரத்தில் வன்னிக்கு அனுப்பி வைக்காது ஏன் ரெஜி இழுத்தடித்தார் என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். அதனைப் புரிந்து கொள்வதற்கு 11.05.2009 அன்று இலண்டன் அல்பேர்ட்டன் பகுதியில் உள்ள அஜெக்ஸ் பிசினஸ் சென்ரர் எனப்படும் அடுக்குமாடி அலுவலகத் தொகுதியில் ரெஜிக்கும், எக்ஸ் என்ற பெயரில் இப்பத்தியில் நாம் விளித்திருக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளருக்கும் இடையிலான உரையாடலை நாம் இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

தனது எதிரில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளரிடம் ரெஜி கூறுகிறார்: ‘நீ லக்கியெடப்பா (அதிர்ஸ்டசாலி) நாட்டுக்குப் போகப் போகிறாய். நானும் கப்பலில் ஏறி வன்னிக்குப் போறது என்றுதான் இருந்தனான். ஆனால் இவங்கள் பிரிட்டிஸ்காரங்கள் என்ரை விசாவைத் தராமல் இழுத்தடிக்கிறாங்கள். நீ வன்னிக்குப் போனதும் நடேசன் அண்ணையைக் காணேக்க என்ரை விசாப் பிரச்சினையை விளங்கப்படுத்தி விடு. அவருக்கு இஞ்சையிருந்து நான் சொல்லுறது விளங்குதில்லை.’

உண்மையில் ரெஜிக்கு விசா பிரச்சினை என்று அப்பொழுது எதுவுமே இருக்கவில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்ற கோதாவில் பல தடவைகள் இலண்டன் வந்து திரும்பிய ரெஜி அவர்கள் 2006ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யுத்தம் வெடித்ததும், சத்தம் சந்தடியின்றி அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பத்து விட்டு இலண்டனில் குடியேறியிருந்தார். அவர் விரும்பியிருந்தால் தனது அகதித் தஞ்ச விண்ணப்பத்தை இரத்துச் செய்து விட்டு, சுயமாக நாடு திரும்புவதாகக் கூறித் தனது கடவுச்சீட்டை பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் பெற்று கடல்வழியில் வன்னி திரும்பியிருக்கலாம். ஆனால் அதை ரெஜி விரும்பவில்லை. அதற்கு மூன்று காரணங்கள் இருந்தன.

ஒன்று, கொழும்பிலும், தமிழீழ தாயகத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும்; சிறீலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் மற்றும், வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பணம் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் ரெஜி இருந்தார் (ரெஜியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக சிறீலங்கா அரசாங்கத்திடம் நூற்றுப் பதினொரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் ரூபா பணத்தை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பறிகொடுத்திருந்தது).

இரண்டாவது தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளில் அமுல்படுத்தப்பட்ட தேட்டம் என்ற நிதி சேகரிப்புத் திட்டத்தில் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யப் போவதாகக் கூறி ரெஜியும், அவரது பினாமிகளும் பெற்றுக் கொண்ட ஏறத்தாள பத்து மில்லியன் பவுண்கள் பணம். அமெரிக்க தொலைபேசி நிறுவனம் ஒன்று மாதாந்தம் ஒரு மில்லியன் பவுண்கள் பணம் இலாபம் ஈட்டுவதாகவும், பத்து மில்லியன் பவுண்கள் கொடுத்தால், அந்நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்க முடியும் என்றும், முதலீடு செய்யப்படும் இப்பணம் பத்து மாதங்களில் இலாபமாக கிடைத்து விடும் என்பதால், அதில் இழப்பதற்கு எதுவுமில்லை என்று கபட நாடகம் ஆடியே அந்நிறுவனத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளை ரெஜி முதலீடு செய்ய வைத்தார். ஆனால் பின்னர் அந்த நிறுவனம் நட்டத்தில் சென்று விட்டதாகவும், அதனால் எதிர்பார்த்த இலாபத்தைப் பெற முடியவில்லை என்றும் ரெஜி கபட நாடகமாடினார். இது பற்றி விசாரிப்பதற்காகவும் வன்னிக்கு ரெஜி அழைக்கப்பட்டிருந்தார்.

மூன்றாவது, வன்னியில் தங்கியிருந்த பொழுது தன்னைக் கண்காணிப்பதற்கென்று நியமிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் போராளி ஒருவரின் கைத்துப்பாக்கியைத் திருடி, அப்போராளியை சிங்கள உளவாளியாக சித்தரித்து, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ரெஜி முயற்சித்து மண்கவ்விய விவகாரம்.

இந்த மூன்று குற்றங்கள் பற்றிய விசாரணைகளில் ஏதாவது ஒன்றில் தான் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் தனக்கு எப்படியான தண்டனை கிடைக்கும் என்று ரெஜி நன்கு அறிந்திருந்தார். இதனால் தான் வணங்கா மண் கப்பலை ஏற்பாடு செய்து, அதில் ஏறி வன்னிக்கு வருமாறு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் பணித்த பொழுது, விசா இழுத்தடிப்பு என்று சாக்குப் போக்குக் கூறியும், பின்னர் கப்பலை ஏற்பாடு செய்யாமலும் ரெஜி அவர்கள் காலத்தை இழுத்தடித்தார்.

(மடையுடைப்புத் தொடரும்)