ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 15

ஞாயிறு ஓகஸ்ட் 12, 2018

கே.பியின் நட்சத்திர விடுதி நாடகம்
- கலாநிதி சேரமான்

கோலாலம்பூரில் தனது பிடியில் சிக்கியிருந்தவரை மசிய வைப்பதற்குத் தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்ட நிலையில், இப்பொழுது கே.பியிற்கு இரண்டு தெரிவுகள் தான் இருந்தன. ஒன்று தனது பிடியில் சிக்கியிருந்தவரை அவர் வசிக்கும் நாடான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிப்பது. இரண்டு வேறு ஆட்களைக் கொண்டு அவரைத் தனது வழிக்குக் கொண்டு வருவது.

எனவே கே.பி கூறினார்: ‘நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு ரெஸ்ட் (ஓய்வு) எடுங்கோ. அதுக்குள்ளை வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்து விடுவீனன். அவையளோடை கதைச்சால் சில வேளை நாங்கள் சொல்வது உண்மையென்று உங்களுக்குப் புரியும்.’

கே.பியின் இந்தக் கூற்று அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. இப்பொழுது அவர் கூறினார்: ‘ருத்ராகுமாரன், புறொபசர் (பேராசிரியர்) சேரன், முருகர் குணசிங்கம், தாசீசியஸ் மாஸ்டர் போன்ற ஆட்கள் வந்து என்னோடு கதைப்பதால் தலைவர் பற்றிய எனது முடிவை நான் மாற்றிக் கொள்ளுவேன் என்று நினைக்கின்றீர்களா?’

இது கே.பியை மட்டுமன்றி, அவருக்குப் பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்த இன்பம், சுகி (சுபன்), தயாமோகன் ஆகியோரையும் திரிசங்கு நிலைக்குத் தள்ளியிருக்க வேண்டும். எல்லோரும் ஒருவரை ஒருவர் அசடு வழியப் பார்த்துக் கொண்டார்கள். சில கணங்களின் பின்னர் சுதாகரித்துக் கொண்டு கே.பி பேசினார்: ‘அவையள் மட்டுமல்ல. இலண்டனில் இருந்து எங்கடை அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் சகோதரர் லூக்காஸ் அம்மானையும் கூப்பிட்டிருக்கிறன். சில வல்வெட்டித்துறை ஆட்களையும் கூட்டிக் கொண்டு வாறதாக ஆள் சொல்லியிருக்கிறார். இதை விட இலண்டன் பி.ரி.எப். (பிரித்தானியத் தமிழர் பேரவை) தலைவர் சுகந்தனையும் வரச் சொல்லியிருக்கிறம். அவுஸ்திரேலியாவில் இருந்து டொக்டர் செல்வி வருகிறார். அவர் ஜி.ரி.வி. தொலைக்காட்சியின் டைரக்டர் (பணிப்பாளர்). இவையளை விட சிவாஜிலிங்கம் எம்.பியும் வருகிறார்.’

இப்படிக் கே.பி கூறியதும் அவரது பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டார்: ‘அது வரைக்கு என்னை வீட்டுக் காவலில் வைச்சிருக்கப் போகிறீங்களா?’

இதனைக் கே.பி எதிர்பார்க்கவில்லை. இன்பத்தைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கூறினார்: ‘நீங்கள் எங்கடை கெஸ்ட் (விருந்தினர்). நான் ஆரையும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் என்றால் ஹொட்டேல் (விடுதி) ஏற்பாடு செய்துதாறன். நீங்கள் அங்கேயே தங்கலாம்.’ இப்படிக் கூறிவிட்டு கே.பி கண்ணசைக்க இன்பம் உள்ளே சென்றார்.  

சில நிமிடங்களின் பின் உள்ளிருந்து திரும்பிய இன்பம் கூறினார்: ‘ரி-ஹொட்டேல் ஜலான் ரார் இல் ரூம் (அறை) ஒன்றும் இல்லையாம். நாளைக்குக் காலையில் வேண்டும் என்றால் ரூம் தரலாம் என்கிறார்கள்.’

கே.பியின் வீட்டுக் காவலில் இருந்து எப்படியாவது வெளியேறி விடலாம் என்று நம்பியிருந்தவருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாகி விடும் என்ற பதற்றம். அவர் மீண்டும் கேட்டார்: ‘வேறை ஹொட்டேல் ஏதும் பார்க்க ஏலாதோ? நான் கோலாலம்பூரை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்.’

**********

 

கோத்தபாய ராஜபக்சவின் நெறியாட்சியில் சிங்கள அரசு முன்னெடுத்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்துவது. இதற்கு இரண்டு யுக்திகளைச் சிங்களம் கையாண்டது.

முதலாவது தவேந்திரன், ராம், நகுலன், விநாயகம் போன்றோரின் ஆட்களை வெளிநாடுகளில் களமிறக்கி அவர்களின் ஊடாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இயக்க சொத்துக்களை வைத்திருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டோரை அணுகி, அவர்களிடம் இருந்து பெரும் தொகையில் நிதியைப் பெறுவது. காடுகளுக்குள் நிற்கும் போராளிகளைப் பராமரித்தல், கொழும்பிலும், தமிழீழ தாயகத்திலும் சிங்களப் படைகளை ஆட்டம் காண வைக்கும் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இவ்வாறான நிதி திரட்டும் முயற்சிகளில் சிங்கள அரசு ஈடுபட்டது. இம் முயற்சிகளில் ஓரளவுக்கு சிங்களம் வெற்றியும் கண்டது.

உதாரணமாக குறைந்த எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் ஸ்கண்டனேவிய நாடொன்றில் இருந்து மட்டும் தென்தமிழீழத்தின் காடுகளில் உள்ள போராளிகளைப் பராமரிப்பதற்கு என்று பத்தாயிரம் டொலர்கள் பணத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ராம் ஊடாக சிங்களம் பெற்றுக் கொண்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது விடயத்தில் சிங்களத்திற்கு வெற்றி கிட்டவில்லை.

சுவிற்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குப் பணிபுரிந்த லோகேஸ் என்பவரிடம் ஒரு மில்லியன் டொலர்கள் வரையான இயக்கப் பணம் இருப்பதாக அடையாளம் கண்டு கொண்ட சிங்களம், ராம் ஊடாக அவரை அணுகி அப்பணத்தைப் பெற்றுக் கொள்ள முயன்றது. ஆனால் அவரோ மசியவில்லை. இறுதியில் நகுலன் தன்னோடு கதைத்தால் அந்தப் பணத்தைத் தருவது பற்றிச் சிந்திக்கலாம் என்று லோகேஸ் என்பவர் கூற, உடனடியாக விழுந்தடித்துக் கொண்டு அவருடன் நகுலன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆனாலும் லோகேஸ் என்பவரோ மசியவில்லை.

இவ்வாறான சூழலில் இரண்டாவது யுக்தியைச் சிங்களம் கையாண்டது.

அந்த யுக்தி இதுதான்: இயக்கச் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றின் ஒரு பகுதியை சிங்கள அரசுக்குக் கையளிக்கலாம். ஆனால் தம்மிடமுள்ள சொத்துக்களில் பெரும்பகுதியை எக்காரணம் கொண்டும் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு வழங்கக் கூடாது. அதேநேரத்தில் தாம் வைத்திருக்கும் சொத்தின் ஒரு பகுதியை  இலங்கைக்குக் கொண்டு வந்து அவர்கள் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த யுக்தியை கே.பி அவர்களே நேரடியாக செயற்படுத்தினார். இவ் யுக்தி பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக விளங்கிய காந்தலிங்கம் பிறேம்ரெஜி என்றழைக்கப்படும் ரெஜி அவர்களிடமே முதலில் செயற்படுத்தப்பட்டது.

**********

 

கே.பியின் வீட்டுக் காவலில் இருந்து தான் வெளியேறாது விட்டால், ஒருவேளை அவரால் தடுத்து வைக்கப்பட்டுத் தான் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வாறு அவர் அச்சமடைந்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் 1996ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2003ஆம் ஆண்டின் முதற் பகுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்களுக்கு கே.பி பொறுப்பாக விளங்கிய பொழுது, அவரது வசமிருந்த கப்பல்களில் பணிபுரிந்த சிலருக்கு இவ்வாறான அனுபவம் ஏற்பட்டிருந்தது. கம்போடியாவில் உள்ள கே.பியின் பண்ணைகளிலும், தாய்லாந்தில் கே.பியின் கப்பல் வணிக நிறுவனங்களின் நிலக்கீழ் அறைகளில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமான முறையில் இவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இது மட்டுமா? செஞ்சோலை, பாரதி இல்லம் என்று வன்னியில் சிறுவர் இல்லங்களை நடாத்திக் கொண்டு இன்று தன்னை ஒரு புனிதர் போல் கே.பி காட்டிக் கொண்டாலும், தனக்குப் பிடிக்காத ஆட்களை சித்திரவதை செய்து, அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து இன்புறுவது கே.பி அவர்களுக்குக் கைவந்த கலை. 1983ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கே.பி இணைந்து கொண்ட பின்னர் அவருடன் சில நாட்கள் தங்கியிருந்த முன்னாள் போராளி ஒருவரின் தகவலின் படி, இரவு வேளைகளில் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கச் செல்லும் கே.பி, படம் முடிந்து வீடு திரும்பும் பொழுது வீதியோரத் தடிகளை முறித்து நடைபாதைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களை மிக மோசமாகத் தாக்குவாராம். நித்திரை குழம்பி, அடி வாங்கிய நோவில் பிச்சைக்காரர்கள் துடிதுடிக்கும் பொழுது, அதனைப் பார்த்து இரசிப்பது கே.பியின் பொழுது போக்காம்.

எனவே கே.பியின் பிடியில் இருந்து தப்பிவிட வேண்டும் என்று அவரது பிடியில் சிக்கியிருந்தவர் தவித்ததில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

அப்பொழுது தனது செல்பேசியை எடுத்து யாரோ ஒருவருடன் சில நிமிடங்கள் கே.பி உரையாடினார். பின்னர் தனது தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டுத் தனது பிடியில் சிக்கியிருந்தவரிடம் கே.பி கூறினார்: ‘உங்களுக்கு ரியூன் ஹொட்டேல் என்ற திறீ ஸ்ரார் (மூன்று நட்சத்திர விடுதி) ஹொட்டேலில் ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். அங்கே எல்லா வசதிகளும் இருக்கு. மற்ற ஆட்கள் வரும் வரை நீங்கள் அங்கேயே தங்கலாம். ஹொட்டேல் மனேஜ்மன்ற் (நிர்வாகம்) எனக்கு நெருக்கமான ஆட்கள் தான். நீங்கள் யோசிக்காமல் அங்கே தங்கலாம்.’

இவ்வாறு அப்பொழுது கே.பி கூறிய பொழுது, அது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்குப் பெரிய விடயமாகத் தெரியவில்லை. மலேசியாவில் இருக்கும் பல ஆயிரம் விடுதிகளில் ஒரு விடுதியாகவே ரியூன் ஹொட்டேல் என்ற மூன்று நட்சத்திர விடுதியும் இருக்கும் என்றே அவர் கருதினார்.

ஆனால் அந்த விடுதியில் ஏறத்தாள இரண்டு மாதங்கள் கழித்து 05.08.2009 அன்று பா.நடேசன் அவர்களின் மகன் மகேந்திரன் பார்த்தீபன் (பா.நடேசன் அவர்களின் சொந்தப் பெயர் மகேந்திரன்) மற்றும் சகோதரர் லூக்காஸ் அம்மான் (பாலசிங்கம் பாலேந்திரன்) ஆகியோருடன் கே.பி உரையாடிக் கொண்டிருந்த பொழுதுதான் அவரது கைது நாடகம் அரங்கேறியது என்பதை பின்னர் அறிந்த பொழுது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் அதிர்ந்தே போனார். ஏனென்றால் தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கே.பி. பீற்றிக் கொண்ட ரியூன் ஹொட்டேலின் அன்றைய நிர்வாகிகள், உண்மையிலேயே கே.பியின் கையாட்கள்தான் என்பதை அங்கு சென்றவுடனேயே அவரது பிடியில் சிக்கியிருந்தவர் புரிந்து கொண்டிருந்தார்.  
 
(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு (07.08.2018)