ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 1

புதன் சனவரி 24, 2018

சிங்கத்தின் வாயில் சிக்கிய எலியின் கதையாக - கலாநிதி சேரமான்

2009 வைகாசி மாதத்தின் மூன்றாவது வாரம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டிப் பத்து நாட்கள் கூடக் கடந்திருக்கவில்லை. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வதைமுகாம் ஒன்றின் கூடாரத் தொகுதி திடீரெனச் சுற்றி வளைக்கப்படுகின்றது. இரட்டை அடுக்கு முட்கம்பி வேலிகள், ஒவ்வொரு கூடாரத் தொகுதியையும் இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிப்பதற்கென்று சுழற்சி முறையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள், மக்களோடு மக்களாக ஊடுருவி நின்ற கருணா, ஈ.பி.டி.பி, புளொட் கும்பல்களின் கைக்கூலிகள் என்று தொடர் கண்காணிப்பிற்கு உட்பட்டிருந்த அந்த வதைமுகாமில் இன்னமும் முழுமையாக இருள் நீங்கியிருக்கவில்லை. சிங்களச் சிப்பாய்களின் கண்களில் படும் முன்னர் எப்படியாவது வைகறை இருளில் காலைக் கடன்களைக் கழித்து விட்டுக் கூடாரத்திற்குத் திரும்பி விட வேண்டும் என்று அங்கிருந்த பெண்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்க, அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி வேகமாக வந்த மூன்று இராணுவ வாகனங்கள் அந்தக் கூடாரத் தொகுதியை முற்றுகையிட்டு நிற்கின்றன. அவற்றில் முதலாவது வாகனத்திலிருந்து ஆயுதம் தாங்கிய படையினர் புடைசூழ அஜானபாகு தோற்றத்தில் இராணுவச் சீருடை தரித்த நிராயுதபாணியான ஒருவர் நொண்டியவாறு நடந்து வருகின்றார். இன்னொரு வாகனத்தில் இருந்து இராணுவத் தளபதி போன்ற தோரணையில் இன்னுமொருவர் இறங்கி வருகின்றார். வந்த இருவரும் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாற்பது வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் தங்கியிருந்த கூடாரத்திற்குள் தமது மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ நுழைகின்றார்கள்.

***


“அண்ணை உங்களை சந்திக்க விரும்புகின்றார்...”

அதுதான் அவருக்கு ஒஸ்லோவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் சாராம்சம். அவ்வளவு தான் அவருக்குத் தொலைபேசியில் கூறப்பட்டது.பொட்டம்மானுடன் அம்புலன்ஸ் வண்டி
யயான்றில் தப்ப முயற்சித்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்று 18.05.2009 அன்று அறிவித்த சிறீலங்கா அரசாங்கம், மறுநாள் 19.05.2009 அன்று இல்லையில்லை, நந்திக்கடலை அண்டியுள்ள கண்டல் காட்டுக்குள் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்று அறிவித்ததோடு, தமிழீழ தேசியத் தலைவரின் உடல் என்று கூறி வரிப்புலிச் சீருடை தரித்த உடல் ஒன்றையும் தொலைக்காட்சிகள் ஊடாகக் காண்பித்து மார்தட்டியது.

மறுபுறத்தில் தமிழீழ தேசியத் தலைவர் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றார் என்று 18.05.2009 அன்று தமிழ்நெற் இணையத்திற்கு செவ்வி வழங்கிய கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், ஆறு நாட்கள் கழித்து 24.05.2009 அன்று அந்தர் பல்டி அடித்துத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டு விட்டார் என்று அறிவித்தார். இந்த ஆறு நாட்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 22.05.2009 அன்று, அதாவது தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து கே.பி அறிக்கை வெளியிடுவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவுப் பொறுப்பாளர் என்ற கோதாவில், கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில், ‘தமிழ்நெற்’ இணையத்திற்கு செவ்வி வழங்கிய ஒருவர், தமிழீழ தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றும், சரியான நேரத்தில் உலகத் தமிழர்களை அவர் தொடர்பு கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு பெரும் குழப்பங்கள் நிறைந்த அந்தப் பத்து நாட்களில் “அண்ணை உங்களைச் சந்திக்க விரும்புகின்றார்”  என்று ஒஸ்லோவில் இருந்து தொலைபேசியில் தெரிவிக்கப்பட்ட செய்தி அவரைப் பெரும் குதூகலத்தில் ஆழ்த்தியிருந்தது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியில் அவர் பல தடவை வன்னி சென்று திரும்பியிருந்தார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சில தடவைகள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களையும் அவர் சந்தித்திருந்தார். அவருடன் தனியாக உரையாடியும் இருந்தார். எனவே மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் தலைவரை சந்திக்கப் போகும் பரவசத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு அன்று எல்லாமே புதுமையாக இருந்தது. ‘அண்ணை என்னைச் சந்திக்க விரும்புகின்றார். எல்லோரும் அண்ணை உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்று தடுமாறிக் கொண்டிருக்க, என்னை அண்ணை அழைத்திருக்கின்றார்’ என்று தனக்குத் தானே கூறி அவர் அகமகிழ்ந்து கொண்டார். அவ்வளவு பரவசம்.

ஒஸ்லோவில் இருந்து அவருடன் உரையாடியவர் கூறியிருந்தார்: ‘கோலாலம்பூருக்கு நேரடியாகப் போக வேண்டாம். மெல்பேர்ணில் (அவுஸ்திரேலியா) இருந்து சிங்கப்பூர் வழியாக சியம் றியப் (கம்போடியா) போய், அங்கு இரண்டு நாள் தங்கியிருந்து, தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் ஊடாகப் பயணச் சீட்டைப் பதிவு செய்து கோலாலம்பூருக்கு செல்லுங்கள். அப்பொழுதுதான் சந்தேகம் வராது.’ வன்னியில் தலைவர் அவர்கள் தங்கியிருந்த பொழுதே எத்தனையோ அடுக்குப் பாதுகாப்புக்களைக் கடந்துதான் அவரைச் சந்திக்க முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தவர் என்ற வகையில், நேரடியாக மூக்கைத் தொடாது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணியில் கோலாலம்பூர் செல்வதற்கு ஒஸ்லோவில் இருந்து தொடர்பு கொண்டவர் கூறிய பயண அறிவுறுத்தல் அவருக்கு துளியளவு கூடச் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.

***

‘அவாவின்ரை புருசன் இயக்கத்திலை பெரிய தளபதி போல இருக்கு...’ எவருக்குமே எதுவுமே புரியவில்லை. கடந்த ஒரு வாரமாகத் தங்களோடு தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தயாரான அந்த நாற்பது வயதுப் பெண்மணி பற்றி எவருக்குமே பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ‘அவவின்ரை சொந்த ஊர் இடைக்குறிச்சி என்றுதான் சொன்னவா. இரண்டு நாளைக்கு முதல் அவா ஆரிட்டையோ போனிலை கதைக்கேக்க கேட்டவா, இஞ்சையிருந்து நாங்கள் எப்ப இந்தியாவுக்கு வந்து சேர்வது என்று’ முற்றுகைக்குள் உட்பட்டிருந்த அந்தக் கூடாரத் தொகுதிக்குள், அந்த நாற்பது வயதுப் பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த கூடாரத்திற்கு வெளியே நீள்வரிசையில் அனைவரும் காக்க வைக்கப்பட்டிருந்தனர்.

நேரம் முற்பகல் 11:00 மணியை எட்டிக் கொண்டிருந்தது. உச்சி வெயில் தலையில் சுட அனைவரும் தமது வாய் போன போக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூடாரத் தொகுதிக்கு வந்த மூன்று நாட்களில் அந்தப் பெண்ணின் கைக்கு செல்பேசி ஒன்று கிட்டியிருந்தது. அந்தப் பெண்ணிடம் கையூட்டுப் பெற்று அவரிடம் செல்பேசியை வழங்கிய இராணுவச் சிப்பாய், இப்பொழுது கூடாரத்தை விட்டு வெளியில் வருவதும், கால்கடுக்க வெயிலில் காத்திருந்தவர்களைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதும், பின்னர் உள்ளே செல்வதுமாக இருந்தான். ஒன்று மட்டும் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தது, கையூட்டுப் பெறுவது போல் பாசாங்கு செய்து, அந்தப் பெண்ணிடம் செல்பேசியை விற்றுப் பின்னர் அதே செல்பேசியூடாக அவர் தொடர்பு கொண்டவரை அடையாளம் கண்டு, அப்பெண்ணை சிங்களப் படையினர் கைது செய்திருந்தார்கள்.

அங்கிருந்த ஒரு பெண் கூறினார்: ‘இவவேதான். சந்தேகமே இல்லை. இவாதான் பிள்ளையானின் மனுசி என்று அந்த சொத்தி ஆமிக்காரன் சொன்னவன்’. உடனே குறுக்கிட்ட இன்னொரு பெண், ‘அவன் பிள்ளையான் என்று சொல்லவில்லை. ‘பிள்ளையார்’ என்று சொன்னவன்...’

***

இரண்டு நாட்கள் கம்போடியாவில் ஒருவாறு பொழுதைப் போக்கி, கோலாலம்பூர் விமான நிலையத்தை அவர் வந்தடைந்த பொழுது, அவருக்காக, அவரது பெயர் தாங்கிய பாதாகையுடன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். இரண்டு பேருமே நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள். வழமையான கைலாகு கொடுப்புக்கள், அறிமுகங்களைத் தொடர்ந்து அவரை ஏற்றிச் செல்ல வந்திருந்த மகிழுந்து வண்டி புறப்பட்டது. வந்திருந்த இருவருமே அவரிடம் வேறு எதுவுமே பேசவில்லை. மெளனத்தைக் கலைத்து அவர்களிடம் அவர் நேரடியாகவே கேட்டார்: ‘அண்ணை சுகமாக இருக்கிறாரா? ஒரு பிரச்சினையும் இல்லை தானே?’

‘இல்லை’ என்றை ஒற்றை வார்த்தை தான் பதிலாக வந்தது. அதிகம் பேசுவது புலிவீரர்களின் வழக்கம் அல்ல. அதனை அவரும் நன்கு அறிந்திருந்தார். எனவே அவரும் மேற்கொண்டு எதையும் பேசவில்லை.

***

‘பாவம் அந்தப் பிள்ளை. இரண்டு பிள்ளையளோடை இருந்தது. இப்ப ஆளை டொக் யார்ட் நேவிக் காம்பிற்கு கொண்டு போய்விட்டாங்களாம்.’ அப்பொழுது ஒருவர் கூறினார். ‘அவாவின்ரை புருசன்காரன் இயக்கத்தின்ரை புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராம். தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று போன கிழமை இலண்டன் உறவுப்பாலம் செய்தியிலை அறிவிச்ச அறிவழகன் என்கிறவர் தான் அவாவின்ரை புருசனாம்.’

‘கெதியிலை வெளியாலை போய், இந்தியாவுக்குப் போய் சேர்ந்து விட்டால் இராமேஸ்வரத்தில் தனது மாமனாரின் காரியங்களை செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவா. அவாவின்ரை மாமன்காரன் செல் பட்டு இறந்து போனாராம்’ இவ்வாறு தனது பங்கிற்கு இன்னொரு பெண் கூறினார்.

எவருக்குமே அந்தப் பெண்ணைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. தாம் அறிந்தவற்றை, தமது காதில் கேட்டவற்றை, தமது வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் எல்லோருக்கும் ஒரு விடயம் தெளிவாகப் புரிந்திருந்தது: திருகோணமலை ‘டொக் யார்ட்’ கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் அந்தப் பெண் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரமுகர் ஒருவரின் மனைவி என்பது.அதை விட எல்லோருமே ஆச்சரியத்துடன் இன்னொரு விடயத்தைப் பேசிக் கொண்டார்கள். அங்கு இராணுவச் சீருடையில், ஆனால் நிராயுதபாணியாக நொண்டியவாறு வந்திருந்த அஜானபாகு தோற்றத்தைக் கொண்ட சிப்பாய் சரளமாகத் தமிழ்ப் பேசியதைப் பற்றித் தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அவரது மொழிநடை திருகோணமலையைச் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில் அவர் சரளமாக சிங்களமும் பேசினார். 

***

கோலாலம்பூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டிற்குள் வாகனம் நுழைந்த பொழுது, எல்லாமே நூதனமாக காணப்பட்டன. வீட்டு வாயிலில் ஒரு காவலாளி மட்டும் நின்றிருந்தார். தலைவர் தங்கியிருக்கும் இடம் என்பதால் உள்ளே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அப்படி எதுவும் இருக்காதது ஆச்சிரியமாக இருந்தது. வரவேற்பறைக்குள் அவர் நுழைந்த பொழுது சற்று உயரமான, அதேநேரத்தில் பருமனான உருவமுடைய ஒருவர் சிரித்தவாறு வந்து அவருக்குக் கைலாகு கொடுத்தார்.

1970களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று முடித்த பட்டதாரிகளின் பாணியில் அவரது ஆடை அணியும் முறை இருந்தது. அவருக்கு அருகில் மிதமான பருமனும், உயரமும் உடைய ஒருவர் நின்றிருந்தார். சாறமும், ரீ-சேர்ட்டும், கறுத்தக் கண்ணாடியுமாக நின்றிருந்த அவரைப் பார்த்து வந்தவர் சிரித்தார். தென்னிந்தியத் திரைப்படங்களில் வரும் சமையல்காரர்கள் போன்று அவரது உடை நடை இருந்தது. ஆனால் சாறமும், கறுத்தக் கண்ணாடியுமாக அவர் நின்றிருந்த விதம், வந்திருந்தவருக்குச் சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. அப்பொழுது அவரது அருகில் நின்ற மற்றைய நபர் பேசினார்: ‘வணக்கம் என்ரை பெயர் இன்பம். ஜப்னா யூனிவேசிற்றியில் நீங்கள் டிகிரீ படிக்கும் பொழுது நான் பொலிற்றிக்கல் சயன்சில் மாஸ்ரேர்ஸ் செய்து கொண்டிருந்தனான். அதற்குப் பிறகு நீங்கள் ஒஸ்ரேலியா போய்விட்டியள்...’

உடனே அவரது அருகில் நின்ற சாறமும், கறுத்தக் கண்ணாடியும் அணிந்த நபர் கூறினார்: ‘இவர் கனடாவுக்கு பொறுப்பாக இருந்தவர்.’ அப்படியே மூவரும் அமர்ந்து கொள்ள, வந்திருந்தவர் ஏனைய இருவரிடமும் கேட்டார்: ‘அண்ணை என்னை சந்திக்க விரும்புகிறார் என்று செய்தி வந்தது. அதுதான் வந்தனான். தலைவர் எப்படி இருக்கிறார்?’அப்பொழுது ஏனைய இருவரும் ஒருவரையயாருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் வந்திருந்தவருக்கு தேனீர் ஊற்றிக் கொடுத்தவாறே சாறமும், கறுப்புக் கண்ணாடியும் அணிந்தவர் கூறினார்:

‘தடியன் என்னை அண்ணை என்று தான் கூப்பிடுகிறவன். நான் தான் கே.பி. செல்வராஜா பத்மநாதன் என்று கொஞ்ச நாளாக செய்திகளில் கேள்விப்பட்டிருப்பியள்.’  வந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தமிழீழ தேசியத் தலைவரை சந்திப்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் போய், அங்கிருந்து கம்போடியா சென்று, இரண்டு நாட்கள் அங்கு தங்கி, பின்னர் மலேசியா வந்தவருக்கு, தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக அங்கு கே.பி அமர்ந்திருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.அப்பொழுது கே.பியின் அருகில் அமர்ந்திருந்த இன்பம் என்பவர் கூறினார்: ‘இப்ப இயக்கத்தின்ரை மிஞ்சியிருக்கின்ற மூத்த உறுப்பினர் கே.பி அண்ணை தான். ஒரு விதத்திலை அவர் தான் இப்ப இயக்கத்தின்ரை தலைவர். அப்படிப் பார்த்தால் இதுதான் இயக்கத்தின்ரை தலைமைச் செயலகம். நீங்கள் சரியான இடத்துக்குத் தான் வந்திருக்கிறியள்.’வந்திருந்தவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சிறிது நேர நிசப்தத்திற்குப் பின்னர் கே.பி பேசினார்: “அண்ணை காண விரும்புகிறார் என்று சொன்னதும், என்ன ஏது என்று கேட்காமல் நீங்கள் இங்கு வந்து விட்டீங்கள். இப்படித்தான் போன பெப்ரவரி மாதமும். யுத்த நிறுத்தம் பற்றி நோர்வே தூதுவர் ரொறே ஹற்ரெம் அவர்களோடு பேசுவதற்காக என்னை வந்து சந்திக்கச் சொல்லி ருத்ராவுக்கு செய்தி அனுப்பியிருந்தேன். அவரும் எங்கே வர வேண்டும் என்று கேட்க, எனது தொடர்பாளர் தலைநகருக்குப் போங்கோ என்று சொன்னார். இரண்டு நாள் கழித்து நாங்கள் இங்கே கோலாலம்பூரில் அவருக்காகப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் பாங்கொக்கில் இருந்து என்ரை தொடர்பாளரிடம் அடிச்சுக் கேட்கிறார், ‘நான் தலைநகரில் நிற்கிறன். ஆனால் எயார் போட்டில் என்னை ஏற்றிச் செல்வதற்கு தமிழர்கள் எவரும் வரவில்லை’ என்று.” உடனே அருகில் இருந்த இன்பம் என்பவர் வாய்விட்டுச் சிரித்தார்.

ஆனால் இதனைக் கேட்ட பொழுது வந்திருந்தவருக்கு சிரிப்பு வரவில்லை. சிங்கத்தின் வாயில் சிக்கிய எலியின் கதையாகத் தனது நிலை இருக்கும் பொழுது உருத்திரகுமாரனைப் பற்றி கே.பி கூறியது அவருக்கு நகைச்சுவையாகத் தெரியவில்லை. மீண்டும் கே.பி பேசத் தொடங்கினார்: “இன்னும் நாலைஞ்சு நாட்களில் ருத்ரா இங்கே வந்து விடுவார். கனடாவில் இருந்து புறொபெசர் (பேராசிரியர்) சேரன் வருகிறார். உங்கடை நாட்டில் இருந்து (அவுஸ்திரேலியாவில்) டொக்டர் முருகர் குணசிங்கம் வருகிறார். ஆள் இப்ப நோர்வேயில் நிற்கிறார். இலண்டனில் இருந்து தாசீசியஸ் மாஸ்ரரும் வருகிறார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று புதுமையாக ஒரு வேலைத் திட்டம் தொடங்கப் போகிறோம். அது பற்றி ஆலோசனை செய்யிறதுக்கு எல்லோரும் வருகீனம். இதில் நீங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும். உங்களைப் போன்ற புத்திஜீவிகளின் பங்கு மிக முக்கியமானது.”

வந்திருந்தவருக்குக் கே.பி கூறியதை மறுக்காமல் கிளிப்பிள்ளை போல் ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.எப்படியாவது கே.பியின் பிடியில் இருந்து தப்பி, மீண்டும் நாடு திரும்பி விட வேண்டும் என்ற எண்ணமே அவரது மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது.

(மடையுடைப்புத் தொடரும்)