ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 9

செவ்வாய் மே 22, 2018

‘யார் அந்த மாறன்?’

‘ஒரு மில்லியன் பவுண்களை கனடாவில் இருந்து உண்டியல் மூலம் பெற்றுக் கொண்ட மணி யார்?’

இந்த இரண்டு கேள்விகளுடனேயே 2009 வைகாசி மாதத்தின் இறுதி நாட்களையும், ஆனி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களையும் இலண்டன் வீதிகளில் கழித்த
வாறு கே.பி, விநாயகம், நகுலன், ராம், தவேந்திரன் போன்றோரின் கையாட்கள் அலைந்து திரிந்த வண்ணம் இருந்தார்கள்.

இதில் மாறன் என்பவரை கோலாலம்பூரில் இருந்தவாறு கே.பியும், ஒஸ்லோவில் இருந்தவாறு அவரது வலது கையான சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேந்திராவும் வலைவீசித் தேடியமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. கே.பியின் தலைமைத்துவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் பதில் பொறுப்பாளரான நெடியவன் அவர்கள் ஏற்க மறுத்த நிலையில், கே.பி-விநாயகம் போன்றோரின் ஆட்களுடனான நெடியவனின் தொடர்பாளராக மாறன் என்பவரே விளங்கினார். அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட மாறன், தன்னுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோருடன் பிடி கொடுக்காமலேயே உரையாடினார். தான் யார் என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தான் எப்பொழுது இணைந்து கொண்டார் என்பது பற்றிய தகவல்களைக் கூட அவர் சரியாகத் தெரிவிக்கவில்லை.

இதனால் அவர் ஒரு போராளியாக அல்லாது, வெளிநாட்டில் நீண்ட காலமாக வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளராக இருக்கலாம் என்ற ஐயமே விநாயகத்தின் ஆட்களுக்கு ஏற்பட்டிருந்தது. தவிர இலண்டனில் இவர் வசித்து வந்தாலும், இலண்டனில் இயங்கி வந்த விநாயகத்தின் ஆட்களுடன் தொலைபேசியில் உரையாடுவதைத் தவிர்த்து ஸ்கைப் இணைவலைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே அவர் உரையாடி வந்தார். இதனால் அவர் உண்மையில் எங்கு தங்கியிருக்கின்றார் என்ற குழப்பமும் விநாயகத்தின் ஆட்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதே குழப்பம் கே.பியின் ஆட்களிடையேயும் நிலவியது.

இவ்விடத்தில் தான் சர்வே அவர்களின் பாத்திரம் முக்கியத்துவம் பெற்றது. லெப்.கேணல் நாதன் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து கே.பியால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராகவும், அனைத்துலக செயலக நிர்வாகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட சர்வே அவர்களுக்கு இலண்டனில் பணிபுரிந்த பெரும்பாலான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும், ஆதரவாளர்களையும் நன்கு தெரியும்.

28.02.2001 அன்று பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட நோர்வேயில் இருந்து அடிக்கடி இலண்டனுக்கு சென்று திரும்பியவர் சர்வே. எனினும் 11.09.2001 அன்று நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கைடா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து இவரை பிரித்தானியாவிற்கு வர வேண்டாம் என்று பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்திருந்தனர். ஆனாலும் இதன் பின்னர் 2003ஆம் ஆண்டு தை மாதம் இலண்டனில் தனது மனைவியின் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் செல்லும் சாக்கில் பிரித்தானியப் புலனாய்வுப் பிரிவினரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையம் ஊடாக இலண்டன் சென்று மீண்டும் அதே வழியில் ஒஸ்லோ திரும்பியவர் சர்வே. இது நடந்தது நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சர்வே நீக்கப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னர்.

இவ்வாறு பிரித்தானியாவிற்கு அடிக்கடி சென்று வந்தவர் என்ற வகையில், தன்னால் எப்படியாவது மாறன் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கை சர்வே அவர்களுக்கு இருந்தது. இதற்காக விநாயகத்தின் ஆட்களுக்கு சர்வே ஒரு யோசனை வழங்கினார்.

*************************************************************************

கம்போடியாவில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்ததில் ஏற்பட்ட களை ஆறுவதற்காக தனக்கு ஒரு விடுதியை ஒழுங்குபடுத்தித் தருமாறு கே.பியிடம் கேட்டு, அது கைகூடாது கே.பியின் வீட்டிலேயே கைதிபோன்று தான் தங்க வைக்கப்பட்டிருந்ததை அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தவரால் ஏற்க முடியவில்லை. தமிழீழத் தேசியத் தலைவரைத் தேடி மலேசியா வந்து கே.பியின் பிடியில் சிக்கிய கவலை இன்னொரு புறம். இதனால் அவர் அன்று இரவு முழுவதும் உறங்கவில்லை.

மறுநாள் காலையில் கூட அவரை அவரது அறையை விட்டு வெளியில் செல்வதற்கு கே.பியின் பாதுகாவலர்கள் அனுமதிக்காதது, தான் எப்படியான நிலையில் இருக்கிறேன் என்பதையே அவருக்கு உணர்த்தியது. ஒருவாறு நண்பகல் வேளை அண்மித்த பொழுது விருந்தினர் கூடத்திற்கு அவர் அழைக்கப்பட்ட பொழுது அங்கு கே.பி இருக்கவில்லை. இன்பமும், நடுத்தர உயரமுடைய, மெல்லிய ஒருவரும் அங்கு அமர்ந்திருந்தார்கள்.

அப்பொழுது இன்பம் பேசினார்: “வாங்கோ... இவர் தான் சுகி. சுபன் என்றும் அழைப்போம். இயக்கத்தின் முதலாவது நீதிபதி. இவர் தான் கே.பி அண்ணையின்ரை நிர்வாக வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்.”

*************************************************************************

இலண்டனில் மணியை மட்டுமல்ல, சேகர் என்பவரையும் தமது வலைக்குள் கொண்டு வருவதற்கான பகீரத பிரயத்தனங்களில் விநாயகத்தின் ஆட்கள் ஈடுபட்டிருந்தமை பற்றி எமது ஏழாவது தொடரில் நாம் வெளிக்கொணர்ந்தமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம். இந் நடவடிக்கைக்குப் பொறுப்பாக திரு என்ற நபரே நியமிக்கப்பட்டிருந்தார்.

இதில் சேகர் என்றழைக்கப்படும் உருத்திராபதி சேகர் என்பவர் தளபதி கேணல் கிட்டு பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானிய கிளையின் ஒரு பிரிவிற்குப் பொறுப்பாக விளங்கியவர். நீண்ட காலமாக பிரித்தானியாவில் வசித்து வந்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு என்ற பெயரில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானிய கிளையின் ஒரு பிரிவிற்குப் பொறுப்பாக விளங்க, தமிழர் மறுமலர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் இயங்கிய அதே பிரித்தானிய கிளையின் இன்னொரு பிரிவிற்குப் பொறுப்பாக நாகேந்திரம் சீவரத்தினம் என்பவர் விளங்கினார். இவர்களில் சேகர் என்பவர் மாவீரர் குடும்ப உறுப்பினர். மற்றையவர் நைஜீரியாவில் ஆசிரியராகப் பணிபுரிந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுத்ததன் மூலம் இயக்கத்திற்கு அறிமுகமாகிய ஒருவர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாகவே அதிகாரப் போட்டி நிலவி வந்தது. சேகர் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு (பிரித்தானியா) இலண்டனில் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தால், அதற்குப் போட்டியாக அதன் எதிர்த்திசையில் இன்னொரு ஊர்வலத்தை சீவரத்தினம் அவர்கள் ஏற்பாடு செய்துவிடுவார்.

இவர்களின் அதிகாரப் போட்டி பிரித்தானியாவிற்கு தளபதி கேணல் கிட்டு சென்ற பின்னரே முடிவுக்கு வந்தது. அதுவும் சீவரத்தினத்தை இயக்க செயற்பாடுகளில் இருந்து நீக்கி விட்டு, தமிழர் மறுமலர்ச்சி சங்கத்தைத் தளபதி கிட்டு செயலிழக்க வைத்த பின்னரே அது முடிவுக்கு வந்தது.

இதேநேரத்தில் தளபதி கேணல் கிட்டுவின் வழிகாட்டலை ஏற்று செயற்பட்ட சேகரின் பெயரில் கிழக்கு இலண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் உள்ள கத்தரின் வீதியில் அமைந்திருக்கும் 211ஆம் எண்ணுடைய வீடு தமிழீழ விடுதலைப் புலிகளால் விலைக்கு வாங்கப்பட்டு, அது தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் முகவரியாகப் பதியப்பட்டது.

பிரித்தானியாவை விட்டு கேணல் கிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பொழுது, அவருடன் போலந்து சென்று சிறிது காலம் சேகர் தங்கியிருந்தார். அப்பொழுது ஒரு தடவை போலந்தில் நடைபெற்ற சிறுவர் மகிழ்வூட்டல் நிகழ்வொன்றிற்கு அவரை கேணல் கிட்டு அனுப்பியதும், அவர் கொடுத்த பணத்தில் அந்நிகழ்விற்குச் சென்று தனது முழு நாளையும் கழித்து விட்டு வீடு திரும்பிய சேகரிடம் ‘நிகழ்வு எப்படி இருந்தது?’ என்று கேணல் கிட்டு கேட்டதும், ’நிகழ்வு நன்றாக இருந்தது...’ என்று சேகர் பதில் கூறியதும், அங்கு என்னனென்ன இயந்திரங்களைப் பயன்படுத்தி சிறுவர்கள் மகிழ்வூட்டப்பட்டார்கள் என்று கேணல் கிட்டு குறுக்குக் கேள்வி கேட்ட பொழுது, அதற்குப் பதிலளிக்க முடியாது சேகர் திணறியதும் வேறு கதை.

உண்மையில் சேகர் அவர்களை சிறுவர் மகிழ்வூட்டல் நிகழ்விற்குக் கேணல் கிட்டு அனுப்பியதன் நோக்கம் அங்கு பயன்படுத்தப்பட்ட சிறுவர் மகிழ்வூட்டல் இயந்திரங்களை அவதானித்து, அவற்றைப் படம் பிடித்து வருவதற்காகத் தான். கேணல் கிட்டுவின் நோக்கம் இவ்வாறான இயந்திரங்களைத் தமிழீழத்திற்கும் தருவித்து, அங்கு சிறுவர்களுக்கான பூங்காக்களை உருவாக்குவதாகும். இதனைப் புரிந்து கொள்ளாத சேகர், ஏதோ தன்னைப் பொழுது போக்கிற்காக கேணல் கிட்டு அனுப்பி வைத்துள்ளார் என்று எண்ணிச் சென்றதுதான் வேடிக்கையானது.

இது இவ்விதமிருக்க சேகர் அவர்களின் பெயரில் ஏறத்தாழ நாற்பதுனாயிரம் பவுண்கள் விலையில் 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வாங்கிய வீடு, 2009ஆம் ஆண்டு வைகாசி-ஆனி மாதங்களில் ஐந்து இலட்சம் பவுண்கள் பெறுமதியை எட்டியிருந்தது. கட்டிடத்திற்கான அடமானமும் முழுமையாக செலுத்தப்பட்ட நிலையில், அது பிரித்தானியாவில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெறுமதி வாய்ந்த அசையாத சொத்து என்றே கூறலாம். அந்தக் கட்டிடத்தை எப்படியாவது சேகரிடம் இருந்து எடுத்து விட்டால் ஐந்து இலட்சம் பவுண்கள் சுளையாகக் கிடைக்கும் என்பதே விநாயகம் அவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த ஐந்து இலட்சம் பவுண்கள் பணத்தையும், கனடாவில் இருந்து மணி என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மில்லியன் பவுண்கள் பணத்தையும் கையகப்படுத்தும் பொறுப்பு திரு என்பவருக்கே வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏதோ ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கே சேகரையும், மணியையும் தான் தேடுவதாகத் தனக்கு நெருக்கமானவர்களிடம் திரு என்பவர் கூறியிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் கோத்தபாய ராஜபக்சவின் மூலோபாயத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கே இதனை திரு என்பவர் ஊடாக விநாயகம் முன்னெடுத்தார் என்பது வெள்ளிடைமலை. ஏனென்றால் எவ்வளவுக்கு எவ்வளவு கோத்தபாய ராஜபக்ச கேட்பதைத் தான் செய்கின்றாரோ, அவ்வளவு விரைவாகத் தனது மனைவி - பிள்ளைகளை கோத்தபாய விடுதலை செய்வார் என்பதே விநாயகத்தின் நப்பாசையாகும்.

*************************************************************************

சர்வே கொடுத்த யோசனைப்படி மாறனை அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளில் விநாயகத்தின் ஆட்கள் வேகமாக இறங்கினார்கள். இதன்படி ஸ்கைப் இணைவலை ஊடாக விநாயகத்தின் ஆட்களுக்கு நெருக்கமான ஒருவருடன் மாறன் உரையாடிய பொழுது அவரது குரல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அதன் பிரதிகள் சர்வே அவர்களுக்கும், கே.பியின் இன்னொரு கரமான இன்பத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் மாறன் என்பவர் யார் என்பதை இன்பம் அவர்களால் ஊகிக்க முடியவில்லை. 1997ஆம் ஆண்டு இலண்டனுக்கு ஒரு தடவை வந்திருந்த பொழுது அந்தக் குரலை செவிமடுத்தது போன்ற நினைவு இன்பம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தாலும், அவர் யாராக இருப்பார் என்பதைக் கிரகித்துக் கொள்வதென்பது இன்பம் அவர்களுக்கு கடினமாக இருந்தது.

ஆனால் ஒஸ்லோவில் இருந்த சர்வேயோ, அலாவுதீன் புதையலைத் தோண்டியயடுத்த மகிழ்ச்சியில் இருந்தது போல் காணப்பட்டார். மாறன் என்ற பெயரில் விநாயகத்தின் ஆட்களுடன் உரையாடியவர் தனக்குத் தெரிந்த, தனக்கு விசுவாசமான ஒரு செயற்பாட்டாளர் என்பதும், தான் சொன்னால் அதனை ஏற்று நடக்கக்கூடியவர் என்றும் சர்வே கருதினார்.

*************************************************************************

ஆசனத்தில் இருந்து எழுந்து தனக்குக் கைலாகு கொடுக்க நடந்து வந்தவரை நேருக்கு நேர் பார்த்த பொழுது குபீர் என்று சிரிக்க வேண்டும் போன்று அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தவருக்கு இருந்தது. ஒரு தடவை வன்னி சென்றிருந்த வேளையில் தளபதி சூசை அவர்களுடன் அவர் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பற்றிய பேச்சு எழுந்த பொழுது ‘அது ஒரு வெங்காய வேதாளம்’ என்று தளபதி சூசை அவர்கள் நகைச்சுவையாகக் கூறியிருந்தார். அப்பொழுது அவுஸ்திரேலியாவில் வந்திருந்தவர் வெங்காய வேதாளம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தார். அந்தக் கற்பனையில் தோன்றிய ஒரு உருவம் தன் முன்னால் சுகி என்ற பெயரில் நின்ற பொழுது, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தவருக்கு சிரிப்பை அடக்குவது கடினமாகவே இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிபதி, அதுவும் முதலாவது நீதிபதி, என்று கூறப்படுபவர் கம்பீரமாக, அஜானபாகு தோற்றத்தில் இருப்பார் என்று நினைத்திருந்தவருக்கு தன் முன்னே நின்றவரைப் பார்த்த பொழுது கோமாளித்தனமாகவே இருந்தது. ஏற்கனவே சாறமும், கறுப்புக் கண்ணாடியும் அணிந்து தன்னை முதல் நாள் சந்தித்த கே.பியை விட மிகவும் கோமாளித்தனமாகவே சுகி என்பவரின் தோற்றம் இருந்தது.

*************************************************************************

மாறன் என்பவர் தனக்குத் தெரிந்த செயற்பாட்டாளர் என்ற அசையாத நம்பிக்கையிலும், அவர் தனது சொல்லுக்குக் கீழ்படிந்து நெடியவனுக்கு எதிராகத் திரும்புவார் என்ற நப்பாசையிலும் இலண்டனில் இருந்த தனது இரண்டு நண்பர்களுடன் தொடர்பு கொண்ட சர்வே, குறித்த செயற்பாட்டாளரை எப்படியாவது தன்னுடன் தொலைபேசி மூலம் உரையாட வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இவ்வாறு சர்வே அவர்கள் தொடர்பு கொண்ட நண்பர்களில் ஒருவர் கூறிய தகவல் சர்வே அவர்களுக்கு இரட்டிப்பான நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அந்தத் தகவல் இதுதான்.

இலண்டனில் இருந்த தனது நண்பருடன் சர்வே தொடர்பு கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு வந்திருந்த அந்தச் செயற்பாட்டாளர், தன்னை ஒரு பரப்புரைச் செயற்பாட்டாளர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். விநாயகத்தின் ஆட்களுடன் உரையாடிய நெடியவனின் தொடர்பாளரான மாறன் அவர்களும் தன்னை அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளராக அறிமுகம் செய்து கொண்டதால், இரண்டு பேரும் ஒரே ஆட்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்பதே சர்வே அவர்களின் கருத்தாக இருந்தது. இதேநேரத்தில் மாறனை எப்படிக் கையாள்வது என்பதும், அவரைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சாத்தியமாகாது போனால், அல்லது அவரை நெடியவனிடம் இருந்து பிரித்தெடுப்பது முயற்கொம்பாகினால், மாறனை எப்படி செயலிழக்க வைப்பது என்ற திட்டமும் சர்வேயிடம் இருந்தது. அந்தத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் பொறுப்பு கோலாலம்பூரில் கே.பியுடன் தங்கியிருந்த இன்பம் அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே அம்புறூஸ் என்பவரைப் பயன்படுத்தி நெடியவன் பற்றியும், அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவதூறான செய்திகளையும், அவர்களுக்கு சேறுபூசும் வகையிலான சோடிக்கப்பட்ட நிழற்படங்களையும் வெளியிட்டு வந்த கே.பி-விநாயகம் அணியினர், தமது சேறுபூசும் படலத்தின் இன்னொரு அங்கமாகச் சிங்கள ஊடகங்களில் ஆங்கிலத்தில் கற்பனைப் புலனாய்வுப் பத்திகளை எழுதுபவரான கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்பவரை அணுகியிருந்தனர். இவரை அணுகும் பொறுப்பு இன்பம் அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 1997ஆம் ஆண்டு கே.பியின் பணிப்பின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதற்காக இன்பம் இலண்டன் சென்றிருந்த பொழுது, அவர் யார் என்பதை அடையாளம் கண்டு, அது பற்றி த சண்டே லீடர் எனப்படும் ஆங்கில மொழியிலான சிங்கள ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதி, அவரை அம்பலப்படுத்தி, அதன் மூலம் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினருக்கு அவர் பற்றித் தகவல் வழங்கி, அவரை நாட்டை விட்டு வெளியேற்றிய சிறீலங்கா தூதரகத்தின் நடவடிக்கைக்குத் துணைபோனவர் டி.பி.எஸ்.ஜெயராஜ்.

இப்பொழுது தமக்கு எதிரானவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும், அவர்களை செயலிழக்க வைப்பதற்கும் டி.பி.எஸ்.ஜெயராஜின் உதவியை இன்பம் நாடியிருந்தது ஒரு வரலாற்று நகைமுரண் என்றே கூற வேண்டும்.

இது இவ்விதம் இருக்க, மாறனை அடையாளம் கண்டு, அவரை நெடியவனிடம் இருந்து பிரித்து செயலிழக்க வைப்பதற்கான முயற்சியில் ஒரு புறம் சர்வே இறங்கியிருக்க, மறுபுறத்தில் மணி என்பவரை அடையாளம் கண்டு அவரிடம் இருந்து ஒரு மில்லியன் பவுண்களைக் கையகப்படுத்துவதற்கான பகீரத பிரயத்தனங்களில் இலண்டனில் இருந்த விநாயகத்தின் கையாட்கள் இறங்கியிருந்தார்கள். குருடன் இருட்டில் கரும்பூனையைத் தேடிய கதையாகவே ஒரு புறம் மாறனையும், மறுபுறம் மணியையும் இவர்களை தேடிக் கொண்டிருந்த சம்பவம் அமைந்திருந்தது.

ஏனென்றால் மாறனும், மணியும் ஒரே ஆட்கள் தான் என்பதையும், அதேநேரத்தில் மாறன் என்று தாம் இனம்கண்டு கொண்ட செயற்பாட்டாளர் மாறன் அல்ல என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு