ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 6

சனி ஏப்ரல் 07, 2018

“அண்ணை உயிரோடு இல்லை என்று சொல்லும் தகுதி உனக்கு இல்லையடா. தலைவர் நிச்சயம் வருவார். இருந்து பார். ஒரு நாளும் உங்கடை ஆட்டத்துக்கு ஈழமுரசு நடக்காது. ஆக மிஞ்சினால் பத்திரிகையை இழுத்து மூடி விடுவோமே தவிர தலைவர் உயிரோடு இல்லை என்று ஒரு நாளும் நாங்கள் செய்தி வெளியிட மாட்டோம்...” இவ்வாறு நகுலனிடம் கூறிவிட்டு அவரது பதிலுக்குக் காத்திருக்காது தொலைபேசி அழைப்பை பிரான்சிஸ் மாமா அவர்கள் துண்டித்து விட்டார். அப்பொழுது தான் தன்னைச் சுற்றியிருந்த எல்லோரையும் பிரான்சிஸ் மாமா நிமிர்ந்து பார்க்கிறார். அவரது முகத்தில், கண்களில் தெரிந்த அதே ஆக்ரோசம், தன்னைச் சுற்றிலும் அமர்ந்திருந்த ஈழமுரசு நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் - நிர்வாகிகளின் முகத்திலும், கண்களில் தெரிந்தது அவருக்கு ஆசுவாசமளித்திருக்க வேண்டும். அதேநேரத்தில் அவரது மூளையத்தில் பொறிதட்டியது போன்ற உணர்வும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

துர்ப்பாக்கியவசமாக பிரான்சிஸ் மாமாவின் மரணம் 16.12.2011 அன்று நிகழ்ந்தது. அது பற்றிய தரிசனம் அவருக்கு இருந்ததோ தெரியவில்லை. ஆனால் தனக்குப் பின்னரும் ஈழமுரசு பத்திரிகை வெளிவர வேண்டும் என்ற சிந்தனையே நகுலனுடனான தொலைபேசி அழைப்பைத் துண்டித்த பொழுது பிரான்சிஸ் மாமாவின் மூளையை ஆக்கிரமித்திருக்க வேண்டும். ஆம்: 26.10.1996 அன்று சிங்களம் மேற்கொண்ட ஒப்ரேசன் பீனிக்ஸ் நடவடிக்கையில் தனது நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் (கந்தையா கஜேந்திரன்) அவர்களை ஈழமுரசு நிறுவனம் பறிகொடுத்திருந்தது. ஒரு ஊடகவியலாளன் என்று கூடப் பார்க்காது, தனது கைக்கூலிகளைக் கொண்டு பாரிஸ் நகரின் வீதிகளில் வைத்துக் கப்டன் கஜன் அவர்களின் உயிரை சிங்களம் வேட்டையாடியது. நிராயுதபாணியாக மரணிக்கும் கணத்தில் கூட, ஆயுதபாணியாக நின்ற தனது கொலையாளியை உயிரோடு பிடிக்க முற்பட்டு, அவனோடு மல்லுக்கட்டி வீழ்ந்த மாவீரனால் தொடங்கப்பட்ட ஈழமுரசின் முகாமைத்துவ அமைப்பான பூபாளம் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில், சிங்களக் கைக்கூலிகளால் தனக்கும், ஈழமுரசின் ஊடகர்கள் - நிர்வாகிகளுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்துக்களை பிரான்சிஸ் மாமா நன்கு புரிந்து கொண்டிருந்தார்.

கே.பியின் வலது கரமான வேலும்மயிலும் மனோகரன் அவர்களால் ஈழமுரசு நிறுவனம் கைவிடப்பட்ட பொழுது, தமிழீழ தாயகத்தில் தொடர்புகளை ஏற்படுத்திப் பத்திரிகைக்கு உயிரூட்டமளித்து, அதனை மீண்டும் இயங்க வைப்பதற்கு அதன் ஆசிரியரும், பொறுப்பாளரும் முன்வந்த பொழுது அவர்களுக்கு உறுதுணையாக நின்று, தனது சொந்தப் பெயரில் ‘பூபாளம்’ அமைப்பை ஆரம்பித்து, அதன் முகாமைத்துவத்திற்கு உட்பட்ட பத்திரிகையாக ஈழமுரசை வெளிக்கொணர்ந்தவர் பிரான்சிஸ் மாமா. ஆனால் நகுலன், ராம், தவேந்திரன், கே.பி போன்ற சிங்களக் கைக்கூலிகளால் அச்சுறுத்தல் எழுந்திருந்த சூழலில் இனியும் தனிநபர் ஒருவரது நிறுவனத்தின் முகாமைத்துவத்திற்கு உட்பட்ட பத்திரிகையாக ஈழமுரசு வெளிவருவதை விட, பொது நிறுவனம் ஒன்றின் வெளியீடாக அது வெளிவருவதே பொருத்தமானது என்று பிரான்சிஸ் மாமா கருதினார்.  

**********************************************************

கோலாலம்பூரில் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. 10.09.2007 அன்று பாங்கொக்கில் தாய்லாந்து காவல்துறையினரால் கே.பி கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததுமே, அவசரமாக தனது உயர்மட்டப் புலனாய்வாளர்களை பாங்கொங்கிற்கு இந்திய வெளியக உளவு அமைப்பான றோ அனுப்பியிருந்தது. அப்பொழுது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விளங்கியவர் எம்.கே.நாராயணன். இந்தியப் பிரதமரின் நேரடிப் பாதுகாப்பு ஆலோசகர் என்ற வகையில், நாராயணனின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட அமைப்பாகவே றோவும் இயங்கி வந்தது. ஆனால் மறுநாள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இன்ரர்போல் அமைப்பின் தாய்லாந்திற்கான தலைமை அதிகாரியான கேணல் அபிசாத் சூரிபுண்ணியா, குமரன் பத்மநாதன் என்ற பெயரில் எவரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இது அன்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று வெளிவராத இன்னுமொரு செய்தியும் இருந்தது. அது பலருக்குத் தெரியாத செய்தி.

ஆம்: இன்ரர்போல் அமைப்பின் பன்னாட்டுஇணைப்பாளர்களில் ஒருவராக அன்றைய காலகட்டத்தில் எம்.கே.நாராயணன் அவர்களும் விளங்கினார் என்பதும், 10.09.2007 அன்று பாங்கொக்கில் வைத்து உண்மையில் கே.பி கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்பதை நன்கு அறிந்தவர்களில் ஒருவராக நாராயணன் விளங்கினார் என்பதும் பலருக்கும் தெரியாத ஒன்று.

ஆக, றோ அமைப்பின் உயர்மட்டப் புலனாய்வாளர்களை பாங்கொக்கிற்கு எம்.கே.நாராயணன் சும்மா அனுப்பி வைக்கவில்லை. தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்கென்று பல ஆண்டுகளாக சிறப்புப் புலனாய்வு அணிகளை தாய்லாந்தில் றோ களமிறக்கியிருந்தது. இவ்வாறான அணிகளில் ஒன்று வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தாய்லாந்தின் முவாங் மாவட்டத்தில் வைத்து 14.05.2003 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆசீர்வாதம் சகாயபவான், தேவராஜா சசிகரன், குணபாலன் சுஜீவ் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். இது நடந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து கே.பி நீக்கப்பட்ட சில வாரங்களில்தான்.

அமெரிக்காவின் சுவொற் எனப்படும் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் யுக்திப் பிரிவுக் காவல்துறையினர் பயன்படுத்தும் அரை இலகு இயந்திர ரகத்தைச் சேர்ந்த குளொக் ரக பிஸ்டல்கள் மற்றும் எச்.கே. மார்க்-23 ரக பிஸ்டல்களையும், அவற்றுக்கான 45,000 தோட்டாக்களையும் கொள்வனவு செய்து அவற்றை வன்னிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நிமித்தம் எடுத்துச் சென்ற பொழுதே இவர்களைக் கைது செய்ததாக அப்பொழுது தாய்லாந்து காவல்துறையினரின் பேச்சாளராக விளங்கிய கேணல் சொம்சாய் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எது எப்படியோ, 10.09.2007 அன்று கே.பி கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை இன்ரர்போல் அமைப்பின் தாய்லாந்துக்கான தலைமை அதிகாரியான கேணல் அபிசாத் சூரிபுண்ணியா மட்டும் மறுதலிக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய, அவரை விட உயர் பதவியில் இருந்த தாய்லாந்து காவல்துறையின் தலைமைப் பேச்சாளரான லெப்.ஜெனரல் ரொன்னரொங்க் யங்க்யுவன் அவர்களும் அச்செய்தியை மறுதலித்தார். தனது செவ்வியில் லெப்.ஜெனரல் யங்க்யுவன் இவ்வாறு கூறினார்: ‘புலிகள் எவரையும் நாங்கள் பாங்கொக்கில் கைது செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதனை வைத்து நாங்கள் பெரும் பரப்புரை அல்லவா செய்திருப்போம்.’ லெப்.ஜெனரல் யங்க்யுவன் அவர்களின் கூற்றுக்கும், 10.09.2007 அன்று வெளிவந்த கே.பியின் கைது பற்றிய செய்தி உண்மையானதா? பொய்யானதா? என்ற வாதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்கலாம். அந்தத் தொடர்பு இதுதான்.

தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராகவும், தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் நியமிக்குமாறு பா.நடேசன் அவர்களின் ஊடாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து, 12.01.2009 அன்று தமிழீழ தேசியத் தலைவரின் கையயாப்பத்துடன் கே.பி பெற்ற நியமனக் கடிதம் அன்றைய தாய்லாந்து பிரதமர் கெளரவ அபிசித் வெஜ்ஜஜீவா அவர்களுக்கே எழுப்பட்டிருந்தது. இதனை நாம் மறுவாசிப்பிற்கு உட்படுத்தினால், இதன் அர்த்தம் தாய்லாந்து அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் கே.பியிற்கு நெருங்கிய உறவு இருந்தது என்பதும், கே.பி பற்றி 12.09.2007 அன்று லெப்.ஜெனரல் யங்க்யுவன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒரு நாடகம் என்பதும் புலனாகும்.

கே.பி தாய்லாந்தில் தங்கியிருக்கின்றார் என்பதும், அவரது துணைவியார் ஒரு தாய்லாந்து பெண்மணி என்பதும் தாய்லாந்து அரசாங்கத்தின் உயர்தரப்பிற்குத் தெரியாத ஒன்றல்ல. தவிர அயல்நாடான கம்போடியாவில் பண்ணைகளையும், தொழிற்சாலைகளையும் கே.பி நடத்தி வந்ததும், அடிக்கடி தாய்லாந்திற்கும், கம்போடியாவிற்கும் இடையில் அவர் பயணங்களை மேற்கொள்வதும் வழமையானது. அப்படிப்பட்ட ஒருவரைக் கைது செய்வது தாய்லாந்து அதிகாரிகளைப் பொறுத்தவரை இலகுவானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கே.பி நீக்கப்பட்ட ஓரிரு வாரங்களில் அவ் அமைப்பின் ஆயுதக் கொள்வனவாளர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று ஈழத்தமிழர்களைக் கைது செய்த தாய்லாந்து காவல்துறையினருக்கு, கே.பியை மடக்கிப் பிடிப்பது கடினமான ஒன்றல்ல. ஒரு விதத்தில் இந்த மூன்று ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கே.பியின் காட்டிக் கொடுப்பு இருக்கலாம் என்ற ஊகம் கூட அவரைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்புக்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இவ் ஊகத்தை வலுப்படுத்தும் வகையில் 14.06.2003 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கல் கப்பல் ஒன்றை சிங்களக் கடற்படையினர் மூழ்கடித்திருந்தனர்.

ஆனாலும் கூட யுத்தம் உக்கிரமடைந்த 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வாழ்வா? சாவா? என்ற போராட்டம் வன்னி மண்ணில் அரங்கேறிக் கொண்டிருந்த அந்த நாட்களில், போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்தால் மட்டுமே மக்களைக் காக்கலாம் என்ற நிலை மேலோங்கியிருந்த சூழலில், இவற்றையயல்லாம் நுணுகி ஆராயும் சந்தர்ப்பம் அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படவில்லை என்றே கருத வேண்டும்.

ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து இவையயல்லாவற்றையும் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கோர்த்துப் பார்த்த பொழுது, அவரது மனத்திரையில் ஒரு தெளிவான காட்சி தென்படத் தொடங்கியிருந்தது. தன்னைப் பதவி நீக்கம் செய்து, அமைப்பில் இருந்து விலக்கியமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும், அவர்களின் வழங்கல் கப்பல்களையும் காட்டிக் கொடுத்து, அதற்கான சன்மானமாக தாய்லாந்திலும், இப்பொழுது மலேசியாவிலும் கே.பி பாதுகாப்பாகத் தங்கியிருக்கின்றார் என்பதும், இதில் இந்திய உளவு அமைப்பான றோவின் பங்கு உள்ளது என்பதும் தான் அவரது மனத்திரையில் ஓடிய காட்சி.

***********************************************************

நகுலன், ராம், தவேந்திரன், கே.பி போன்றவர்களின் கையாட்களைப் பயன்படுத்திப் பூபாளம் நிறுவனத்தின் தலைவரான தன்னையும், ஈழமுரசு பத்திரிகையின் ஏனைய ஊடகவியலாளர்கள் - நிர்வாகிகளையும் இலக்கு வைத்துப் படுகொலை முயற்சிகளை சிங்களம் மேற்கொள்ளலாம் என்று பிரான்சிஸ் மாமா சந்தேகித்தமைக்கு கப்டன் கஜன் அவர்களின் படுகொலையை மட்டும் நாம் காரணமாகக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்வதற்கென்று தனியான பிரிவை மேஜர் ஜெனரல் கபில காமின கெந்தவிதாரணவின் கண்காணிப்பின் கீழ் கோத்தபாய ராஜபக்ச உருவாக்கியிருந்தமை பற்றிய தகவல்கள் அக்காலப் பகுதியில் கசிந்திருந்தமையும் அதற்கான காரணமாக இருக்கக்கூடும். இந்தப் பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த மணிலால் விக்கிரமதுங்கவின் படுகொலையாகும்.

கடந்த சில மாதங்களாக கசியும் தகவல்களின் படி, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை நடவடிக்கையில் முக்கியமானவர் சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறை அதிகாரியான பிறேமானந்த உதலகம ஆவார். யுத்தம் முடியும் வரை தேசத்துரோகி கருணாவின் (விநாயகமூர்த்தி முரளீதரன்) பாதுகாப்பிற்கென்று கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மெய்பாதுகாவலர்களின் அணிக்குப் பொறுப்பாகவும் இவர் விளங்கினார். யுத்தம் முடிவடைந்ததும் இவரைக் கோத்தபாயவின் பணிப்பின் பேரில் யேர்மனிக்கு மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண அனுப்பி வைத்தார்.

யேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் சிங்கள ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பது மட்டுமன்றி, பிரான்ஸ் உள்ளடங்கலான ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் செயற்படக்கூடிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் - ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.

எது எப்படியோ, உதலகமவின் சிலந்தி வலையமைப்பில் நகுலன், ராம், தவேந்திரன், கே.பி போன்றோரின் கையாட்கள் மட்டும் இருக்கவில்லை. அவ் வலையமைப்பில் தவேந்திரனின் உதவியுடன் தனது துணைவியும், பிள்ளைகளும் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதால், கே.பியுடன் ஒத்துழைப்பதற்கு இணங்கிய விநாயகம் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் ஆட்களும் இருந்தார்கள் என்பதுதான் 2009 வைகாசி மாத இறுதியில் ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய திருப்பமாகும்.

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிக்கும் பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களிடையே குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று ராம் அவர்களிடம் தொலைபேசி மூலம் வேண்டிக் கொண்டதற்காக, ‘டேய் உன்னை யேர்மனியில் இருந்து ஊருக்குத் தூக்குவோமடா!’ என்று யேர்மனியில் வசித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை விநாயகம் அவர்களின் நம்பிக்கைக்குரிய கையாட்களில் ஒருவர் மிரட்டிய பொழுதுதான் உதலகமவின் வலைப் பின்னல் பட்டவர்த்தனமாகியது.

நன்றி: ஈழமுரசு

(மடையுடைப்புத் தொடரும்)