ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணாக நேர்முகப் பரீட்சை!

செப்டம்பர் 13, 2017

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிலவும் ஆசிரியர் ஆலோசகர் பதவி வெற்றிடத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டு, அதன் பின்னர் ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணாக நேர்முகப் பரீட்சை நடைபெற்றிருப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இது விடயமாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இன்று (13) அவரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரால் வலயத்திலுள்ள அதிபர்களுக்கு 27.06.2017ஆம் திகதிய BT/ZEO/GEN/2017 இலக்கமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின்படி, வெற்றிடமாகவுள்ள 9 பாடங்களுக்குரிய ஆசிரியர் ஆலோசகர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இதன்படி கணிதம், ஆங்கிலம், வரலாறு, நாடகமும் அரங்கியலும், உடற்கல்வி, வாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும், முறைசாரக் கல்வி, விசேட கல்வி, மனைப்பொருளியல் போன்ற பாடங்களுக்குரிய ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்காகக் கோரப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பம் கோரல், 2014.09.19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கல்வி அமைச்சின் ED/02/29/01/01/16  இலக்கமிடப்பட்ட சுற்று நிருபத்துக்கு முரணாகக் காணப்படுகிறது.

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின்படி பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதுடன், பட்டப் பின்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் சேவை I அல்லது ஆசிரியர் சேவை II - I ஆகியவை தகைமையாகக் கொள்ளப்படுவதோடு உயர்ந்தபட்ச வயதெல்லை 50 ஆக இருத்தல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திலெடுக்காமலேயே  வலயக் கல்விப் பணிப்பாளரின் விண்ணப்பம் கோரல், நேர்முகப் பரீட்சை என்பன இடம்பெற்றுள்ளமை தெரியவருகின்றது.

மேலும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணாக 12 அதிபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதையும் வலயத்தில் பல்வேறான பதவிகளுக்கு பொருத்தமற்ற உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதோடு, ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட சட்டவிதிகளுக்கு முரணானச் செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் கவனத்தில்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்