நிதி ஆதாயத்துக்காக தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 நிறுவனங்களுக்கு தடை

நிதி ஆதாயம் இலக்காக கருதி தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 கல்வி நிறுவனங்கள் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கோப் உபகுழுவில் குறிப்பிட்டனர்.

அந்த நிறுவனங்கள் மீதான தடையுடன் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது மற்றும் அந்த நிறுவனங்களுக்கு முத்திரையிடுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுடன் முறையான திட்டத்தை தயாரிக்ககுமாறு உப குழு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிற்சந்தையை இலக்குவைத்து சகல தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் வளங்களை ஒன்றிணைத்து பொது வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதை விரைவுபடுத்துமாறு மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

உயர் சம்பளத்துடன் கூடிய சில வெளிநாட்டு வேலைகளுக்கு அதிக தேவை இருப்பதால் தரமான திறமையான தொழிலாளர்களை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உபகுழு வலியுறுத்தியது.

2023 மே 16ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழு உள்ளிட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  மதுர விதானகே தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்  கூடியது.

இதன்போதே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு கல்வி அமைச்சு மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை, இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

சில தொழிற்கல்வி நிறுவனங்களின் பணிகள் மற்றும் நோக்கங்கள் சீராக இல்லாததால், பொதுவான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.

க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நிறைவுசெய்த மாணவர்களை உள்ளடக்கிய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான முன்னோடித் திட்டம் செப்டெம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இவ்வாறான வேலைத்திட்டங்கள் பல்வேறு அரசுகளின் கீழ் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாத பொதுவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் வகுகக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்பிக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்குக் குறைவான சம்பளம் வழங்கப்படுவது போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் நியாயமான கட்டணம் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்பில் முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உபகுழு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தேசிய தகவல் அமைப்பை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவில் ஏற்கனவே தரவு அமைப்பு இருப்பதாகவும் அவற்றுடன் தற்பொழுது ஈடுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாத பரீட்சைத் திணைக்களம் போன்ற நிறுவனங்களையும் அவற்றுடன் ஒன்றிணைத்து இத்தகவல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

போலி என்.வி.க்யு சான்றிதழ்களை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது. இந்த சான்றிதழ்களை க்யுஆர். குறியீடுகள் மூலம் அடையாளம் காண முடியும் என்றாலும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தற்போதுள்ள குறைபாடுகளை பூர்த்தி செய்ய சட்டத்தில் திருத்தத்தை விரைவுபடுத்துமாறு குழு அறிவுறுத்தியது.

அரச மற்றும் தனியார் துறையில் உள்ள பதவிகளை சர்வதேச மற்றும் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளாக மாற்றப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு எடுத்துக்காட்டப்பட்டது. இது தொடர்பில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

என்.வி.க்யு. சான்றிதழ் பாடநெறிகளை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. நிதி ஆதாயம் மட்டுமே கருதி தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 கல்வி நிறுவனங்கள் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் அதனையும் மீறி பத்திரிகை விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது மற்றும் அந்த நிறுவனங்களுக்கு முத்திரையிடுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுடன் முறையான திட்டத்தை தயாரிக்கு மாறும் குழு பரிந்துரைத்தது.