மணிப்பூர் சென்று பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வன்முறையில் குக்கி, மைத்தேயி ஆகிய இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான பாதிப்பு குக்கி மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இரு தரப்பினருமே மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளைக் குற்றம் சாட்டுகின்றனர்.

இதிலிருந்து குக்கி சமூக மக்களை மட்டுமின்றி மைத்தேயி சமூக மக்களையும்கூட மணிப்பூர் மாநில அரசு பாதுகாக்கவில்லை என்பதை அறியமுடிந்தது. நிவாரண முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு அவர்கள் தங்கியுள்ள இடங்களில் குடிநீர், சுகாதாரம், மின்சார விளக்குகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறையால் இடம் பெயர்ந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பைத் தொடர உடனடி நடவடிக்கை வேண்டும். இணைய வசதி கடந்த 3 மாதங்களாக முடக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒட்டு மொத்தமாக மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எனவே, இணைய வசதியை உடனே வழங்க ஆவன செய்ய வேண்டும். கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள் ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் அடை யாளங்கண்டு அவர்களை உடனடியாகக் கைதுசெய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

குக்கி, மைத்தேயி ஆகிய இருதரப்பினரின் குற்றச்சாட்டுக்கும் ஆளாகியிருக்கும் மணிப்பூர் முதல்-மந்திரியை மாற்றிவிட்டு ஒரு சார்பில்லாத வேறொரு வரை முதல்வராக நியமிக்க வேண்டும். பிரதமர் மோடி உடனே மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும். வன்முறையில் வீடுகள் உள்ளிட்ட உடமைகள் யாவற்றையும் இழந்த இரு தரப்பினருக்கும் தனித்தனியே இழப்பு எவ்வளவு என்பதைக் கணக்கெடுப்புச் செய்து அவர்களுக்குப் போதிய இழப்பீட்டை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.